மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பாஜ தேசிய தலைவர் பதவிக்காக பூஜை!
மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பாஜ தேசிய தலைவர் பதவிக்காக பூஜை!
ADDED : நவ 02, 2025 03:04 AM

புதுடில்லி: மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், பா.ஜ., தேசிய தலைவர் பதவி மீது ஒரு கண் வைத்துள்ளார்; எப்படியாவது இந்த பதவியை அடைந்துவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.
நான்கு முறை மத்திய பிரதேச முதல்வராக பணியாற்றியுள்ள இவர், 2023 ம.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற காரணமாக இருந்தார். ஆனால், இவருக்கு முதல்வர் பதவி தராமல், மத்திய அமைச்சர் பதவி அளித்தார் பிரதமர் மோடி.
சமீபத்தில், இவர் தன் மனைவி சாதனா சிங்குடன் வேலுார் வந்தார். இங்குள்ள, ஸ்ரீலஷ்மி நாராயணி பொற்கோவிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டு பூஜை செய்துள்ளார். 'இந்த கோவிலுக்கு வர வேண்டும்' என இவருக்கு ஆலோசனை கூறியது, இவரது மனைவி சாதனா.
'நீங்கள் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியது போதும். கட்சியின் தேசிய தலைவர் பதவியில் அமருங்கள்; அது, அமைச்சர் பதவியை விட மிகவும், 'பவர்புல்' என, கூறினாராம் சாதனா. இதற்காக, வேலுார் பொற்கோவிலுக்கு வந்துள்ளார் சவுகான். 'பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் தான், தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்' என, சொல்லப்படுகிறது.
கடந்தாண்டு ஜூனில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது; ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை புதிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. நட்டாவே, இந்த பதவியில் தற்காலிகமாக நீடித்து வருகிறார்.
இந்த பதவிக்கு யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்வதில், பா.ஜ.,வின் வழிகாட்டியாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பங்கு உண்டு. சமீபத்தில், இந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தையும் சந்தித்தார், சிவ்ராஜ் சிங் சவுகான்.

