புகழ்ந்து பேசினால் தான் இங்கே புத்தகம் விற்க முடியும்; பதிப்பாளர்கள் படும் அவதிக்கு அளவே இல்லை!
புகழ்ந்து பேசினால் தான் இங்கே புத்தகம் விற்க முடியும்; பதிப்பாளர்கள் படும் அவதிக்கு அளவே இல்லை!
ADDED : நவ 02, 2025 07:37 AM

நமது நிருபர்
ஆட்சியாளர்களையும், 'பபாசி' நிர்வாகத்தையும் புகழ்ந்து பேசினால் தான் புத்தகங்களை விற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மாவட்ட புத்தக கண்காட்சிகளுக்கு செல்லும் பதிப்பாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் வகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'யும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சிகளை நடத்துகின்றன. இதற்காக தமிழக அரசின் சார்பில், மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா, 30 லட்சம் ரூபாய்; வேலுார், துாத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலுார், கரூர் மாவட்டங்களுக்கு தலா, 25 லட்சம் ரூபாய்; மற்ற மாவட்டங்களுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு, 8.45 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியானது, மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் அரங்குகள் அமைப்பது, பிரதான சாலைகளில், 'பிளக்ஸ் பேனர்'கள் வைப்பது, வாகனங்களில், 'ஸ்டிக்கர்'கள் ஒட்டுவது, அந்தந்த பகுதி வானொலி, 'டிவி'களில் விளம்பரம் செய்வது உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படுகிறது. இவ்வளவு வசதிகள் செய்தும், ஆளும் கட்சியினரையும், 'பபாசி' நிர்வாகிகளையும் புகழ்ந்து, 'கவனி'த்தால் தான் புத்தகங்கள் விற்க முடியும் என, முன்னணி பதிப்பகத்தினர் புலம்புகின்றனர். அவர்கள் கூறியதாவது:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்மாநில மொழிகளின் புதிப்பாளர்கள், சென்னையில் தான் இயங்கினர். அவர்களை ஒருங்கிணைக்கவும், புத்தக விற்பனையின் சந்தையாகவும், வாசகர்களின் மையமாகவும் சென்னையை மாற்றும் வகையில், 50 ஆண்டுகளுக்கு முன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
உழைப்பே காரணம்
அப்போதைய முன்னணி பதிப்பாளர்களால் துவங்கப்பட்ட புத்தக கண்காட்சி, இதுவரை, 48 ஆண்டுகள் நடத்தப்பட்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில், சென்னையில் லட்சக்கணக்கானோர் கூடும் இடமாக புத்தகக் கண்காட்சி மாறியுள்ளதற்கு, தொடர் உழைப்பே காரணம். இந்நிலையில் தான், தனியார் அமைப்பு நடத்தும் ஒரு கண்காட்சிக்கு, பாதுகாப்பு அளிப்பது முதல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தருவது, கழிவு மேலாண்மை செய்வது என, அனைத்திலும் அரசும் பங்களிக்கிறது.
புத்தக வாசிப்பில் ஆர்வமுடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த புத்தக கண்காட்சியை அறிவுத் திருவிழாவாக மாற்றும் வகையில், 1 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கினார். அதிலிருந்து சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், புத்தக வாசிப்பில் ஆர்வமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்களின் முயற்சியால், முக்கிய நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. பின், தமிழக அரசே, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்த நிதி உதவியும் செய்கிறது. இது, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காதது.
ஆனாலும், 'பபாசி'யின் முக்கிய பொறுப்புகளில் உள்ளோர், ஆளுங்கட்சியினரை தவறாக வழிநடத்தி, இந்த திட்டத்தை சிதைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்ல எழுத்தாளரின் எழுத்தை கண்டறிந்து, எழுத்தை பெற்று, அச்சிட்டு, தரமான புத்தகமாக்குவதற்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது. அப்படி அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை, தற்போது வாசகர்களிடம் சேர்க்க முடியவில்லை. இதற்கு காரணம், பபாசியின் தலைமை பொறுப்பில் உள்ளோர், தங்களுக்கு தெரிந்தவர்களை பினாமிகளாக வைத்து, பல்வேறு பெயர்களில், 400க்கும் மேற்பட்ட போலி பதிப்பகங்களை உருவாக்கி, ஸ்டால்களை பெறுவது தான்.
அவர்கள், ஒரே பதிப்பகத்தின் நுால்களை விற்க, பல்வேறு பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களின் பெயர்களில் அரங்குகளை பெறுகின்றனர். உதாரணமாக, தற்போது களத்தில் இல்லாத, 'தாழையான் பதிப்பகம், ஓம்சக்தி இன்டர்நேஷனல்' உள்ளிட்டவற்றை இருப்பதாகக் காட்டி, போலி உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். அவ்வாறான போலி பதிப்பகங்களின் சார்பில், பிரபல பதிப்பக நுால்களை, 10 சதவீத தள்ளுபடியில் பெற்று, கண்காட்சியில் இரட்டை அரங்குகளை அமைத்து விற்பனை செய்கின்றனர்.
விற்க முடிவதில்லை
மேலும், கிலோ கணக்கில் பழைய ஆங்கில நுால்களை பெற்று, பல அரங்குகளில், 50 சதவீதத் துக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், புதிய நுால்களை அச்சிட்ட வர்களால், விற்பனை செய்ய முடிவதில்லை. மேலும், ஒற்றை அரங்கு பெறும் பதிப்பாளர்களுக்கு, புத்தகங்களை எடுத்துச் செல்வது, வேலையாட்களை தங்க வைப்பது உள்ளிட்டவற்றுக்கான செலவு அதிகம்.
புத்தக விற்பனை மந்தம் என்பதாலும், அடுத்தடுத்த மாதங்களில் அருகருகே உள்ள மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதாலும், புத்தக விற்பனையில் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பல அரங்குகளை பெற்று அதிக லாபம் பெறுவோர், அந்தந்த மாவட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களின் வாயிலாக, மாவட்ட செய்தி துறை அதிகாரிகளை சரிசெய்கின்றனர். அதன்பின், மாவட்ட கலெக்டர்களின் அனுமதியை பெற்று, மாவட்ட, பஞ்சாயத்து, கட்சி நுாலகங்களுக்கான கொள்முதலையும் பெற்று விடுகின்றனர்.
இதனால், முன்புபோல நுாலக ஆணைக் குழுவால், பொது நுாலகத் துறையின் வாயிலாக, வெளிப்படையாக புத்தகங்கள் வாங்கப்படுவதில்லை. எனவே, நல்ல நுால்கள், வாசகர்களின் கைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை சமாளிக்க வேண்டும் எனில், தற்போதைய, 'பபாசி' நிர்வாகத்தாருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் , அந்தந்த ஊரில் உள்ள ஆளும் கட்சியினரை புகழ்ந்தும் பேசினால் தான் புத்தகம் விற்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

