லஞ்ச வழக்கில் எஸ்.பி., சிக்கியதால் வந்தது வினை: காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் நிர்வாக சிக்கல்
லஞ்ச வழக்கில் எஸ்.பி., சிக்கியதால் வந்தது வினை: காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் நிர்வாக சிக்கல்
ADDED : ஏப் 02, 2025 04:48 AM

சென்னை: 'காவல் துறை தொழில் நுட்பப்பிரிவு எஸ்.பி., லஞ்ச வழக்கில் சிக்கியதால், அந்த பணியிடம் காலியாக்கப்பட்டு, நிர்வாக சிக்கல் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும், அவற்றை கண்காணிக்கவும், டி.ஜி.பி., அலுவலகத்தில், தொழில் நுட்பப்பிரிவு உள்ளது. இப்பிரிவுக்கு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, பி.இ., மற்றும் பி.டெக்., முடித்த பட்டதாரிகள் மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள், எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவர்கள், 'எஸ்.ஐ., டெக்னிக்' என்று, அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., என, பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
அதேபோல, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 'டி.எஸ்.பி., டெக்னிக்' என்ற பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட, அன்புச்செழியன் என்பவர், டி.ஜி.பி., அலுவலகத்தில், தகவல் தொழில் நுட்பப் பிரிவு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார்.
இப்பிரிவு வாயிலாக, 'சிசிடிவி' கேமராக்கள், ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்டவை கொள்முதல் செய்ததில், மிகப்பெரிய மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, 2020ல் அன்புச்செழியன் உள்ளிட்ட, 14 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அன்புச்செழியன், சென்னை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள, காவலர் உயர் பயிற்சியகத்திற்கு மாற்றப்பட்டார்.
அவருடன், 'டி.எஸ்.பி., டெக்னிக்' பணியில் சேர்ந்தவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். எஸ்.பி., இல்லாததால், தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, காவல் துறை தகவல் தொழில் நுட்பப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
காவல் துறைக்கு, தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதல் செய்வது, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பராமரிப்பு, நவீன தொழில் நுட்பம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் எழுப்பும் கேள்விகளுக்கு, எங்கள் பிரிவின் எஸ்.பி.,யே பதில் அளித்து வந்தார்.
தற்போது எல்லா பணிகளையும், தொழில் நுட்பப்பிரிவு, ஐ.ஜி., கவனிக்க வேண்டி உள்ளது. ஏற்கனவே இருந்த எஸ்.பி., லஞ்ச வழக்கில் சிக்கியதால், அந்த பணியிடமே ரத்து செய்யப்பட்டு விட்டது.
எஸ்.பி., பணியிடம் இல்லாததால், தகுதி இருந்தும் கூடுதல் எஸ்.பி.,க்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி., பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.