டீசலுக்கு 'என்ட்ரி டேக்ஸ் செஸ்' விதிக்க தமிழக அரசு பரிசீலனை: நிதி நெருக்கடியை சமாளிக்க தீவிரம்
டீசலுக்கு 'என்ட்ரி டேக்ஸ் செஸ்' விதிக்க தமிழக அரசு பரிசீலனை: நிதி நெருக்கடியை சமாளிக்க தீவிரம்
UPDATED : நவ 15, 2024 03:40 AM
ADDED : நவ 14, 2024 10:09 PM

சென்னை: மகளிருக்கு இலவச பஸ் பயணம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட செலவு களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு நாளைக்கு, 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்க, 'என்ட்ரி டேக்ஸ் செஸ்' என்ற பெயரில், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் காலை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
இலவச பஸ் சேவை
அதன்மீது விதிக்கப்படும் கலால் வரி வாயிலாக, மத்திய அரசுக்கும், மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது.
தமிழக அரசு, மகளிருக்கு இலவச பஸ் சேவை வழங்குகிறது. அதனுடன், டீசல் உள்ளிட்ட செலவால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஒரு நாளைக்கு, 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அத்துடன், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தால் மாதம்தோறும், 1,500 கோடி ரூபாய் செலவாகிறது.
இதுபோன்ற இலவச திட்டங்களால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த செலவுகளை சமாளிக்க, கூடுதல் வருவாயை பெருக்கும் நடவடிக்கையில், அரசு ஈடுபட்டுள்ளது.
அதன்படி டீசலுக்கு, 'என்ட்ரி டேக்ஸ் செஸ்' என்ற பெயரில், கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக, தமிழக நிதித்துறை உள்ளிட்ட அதிகாரிகள், வணிக வரி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.
பெட்ரோலிய துறையினர் கூறியதாவது:
தற்போது சென்னையில், மத்திய அரசின் கலால் வரி, தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை சேர்த்து, லிட்டர் டீசல் விலை, 92.39 ரூபாயாக உள்ளது.
சிறப்பு கலால் வரி
அதில், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள அடிப்படை விலை, 56.27 ரூபாய். அடிப்படை கலால் வரி, 1.80 ரூபாயாகவும்; சிறப்பு கலால் வரி, 2 ரூபாயாகவும், வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி, 4 ரூபாய்; சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி, 8 ரூபாயாகவும் உள்ளது.
மதிப்பு கூட்டு வரி, 17.39 ரூபாய்; டெலிவரி சார்ஜ், 35 காசு, லைசென்ஸ் கட்டணம், 44 காசு, டீலர் லாபம், 2.14 ரூபாயாக உள்ளது. அடிப்படை கலால் வரி, சிறப்பு கலால் வரி, வேளாண் உள்கட்டமைப்பு கூடுதல் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி ஆகியவற்றில் இடம்பெறும், 15.80 ரூபாய் மத்திய அரசுக்கு வருவாயாக செல்கிறது.
தமிழக அரசுக்கு மதிப்பு கூட்டு வரியும்; டெலிவரி சார்ஜ், லைசென்ஸ் கட்டணம், எண்ணெய் நிறுவனங்களுக்கும் செல்கின்றன. எனவே, வேளாண், சாலை உள்கட்டமைப்பு கூடுதல் வரி போன்று, மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசும் டீசல் மீது, கூடுதல் வரி விதிக்க வாய்ப்புள்ளது. இந்த சுமை, வாகன ஓட்டிகள் மீது தான் விழும். இவ்வாறு கூறினர்.