ஆணவ கொலைகளுக்கு யாரும் வாய் திறக்கல: திருமாவளவன் ஆதங்கம்
ஆணவ கொலைகளுக்கு யாரும் வாய் திறக்கல: திருமாவளவன் ஆதங்கம்
UPDATED : ஆக 12, 2025 04:44 AM
ADDED : ஆக 12, 2025 04:09 AM

பெரம்பலுார்: நெல்லை கவின் கொலையை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வி.சி., தலைவர் திருமாவளவன், பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
தலித் மக்களுக்கு எதிரான ஆணவப் படுகொலைகள் நடக்கும்போது, பெரிய கட்சிகள்; புதிய கட்சிகள் எதுவும் வாய் திறப்பதில்லை.
நடிகர் விஜயால், இந்த ஆணவ படுகொலையை கண்டிக்கக்கூட முடியவில்லை. தி.மு.க., அரசை கடுமையாக விமர்சிக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து, ஆறுதல் சொல்லவில்லை; கண்டிக்கவும் முடியவில்லை.
இது போன்ற சமூக அநீதிகளை கண்டிக்கும் துணிச்சல் வி.சி.,க்களுக்கு மட்டுமே உண்டு. ஏனென்றால், நாங்கள் எந்த ஆதாயக் கணக்கையும் போட்டு பேசவில்லை.
இந்த பிரச்னைக்கு, தி.மு.க., அரசு தான் காரணம், என்று அ.தி.மு.க.,வால் கூட சொல்ல முடியாதது அவலம். தலித் இன மக்களின் ஓட்டு வேண்டும். ஆனால், சமூக வெறி பிடித்தவர்களை கண்டிக்க துப்பில்லை. காலம் காலமாக இதுதான் நடக்கிறது. இறுமாப்புடன் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன.
அ.தி.மு.க., என்ற கட்சி அழிந்து விடக்கூடாது; அது வலுவுடன் இருப்பது தான் நல்லது என பேசினேன். அதற்கு காரணம், அ.தி.மு.க., இருப்பதால் தான், இங்கு தேசிய கட்சிகளால் கால் ஊன்ற முடியவில்லை. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.