இந்தியா அணை கட்டி முடிக்கட்டும்: ஏவுகணைகள் வீசி தகர்த்தெறிவோம் பாக்., ராணுவ தளபதி திமிர் பேச்சு
இந்தியா அணை கட்டி முடிக்கட்டும்: ஏவுகணைகள் வீசி தகர்த்தெறிவோம் பாக்., ராணுவ தளபதி திமிர் பேச்சு
UPDATED : ஆக 12, 2025 12:49 PM
ADDED : ஆக 12, 2025 04:41 AM

புளோரிடா: 'சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். அதன் பின், 10 ஏவுகணைகளை வீசி தகர்ப்போம்' என, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இந்தியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் திமிராக பேசியுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்தப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நம் படைகள் மேற்கொண்டன. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நடந்த மோதல், பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், நான்கு நாட்களில் நிறுத்திக் கொள்ளப்பட்டது.
ஆனால், தன் தலையீட்டால் தான் இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். நம் நாடு மறுத்தபோதும் அதையே தொடர்ந்து கூறி வருகிறார்.
அதே நேரத்தில், டிரம்புக்கு ஆதரவாக பாகிஸ்தான் பேசியது. குறிப்பாக அந்த நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர், டிரம்புக்கு ஆதரவாக பேசினார். இதையடுத்து அவரை நேரில் வரவழைத்து டிரம்ப் விருந்து கொடுத்தார்.
அப்போது, போரை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அசிம் முனீர் கூறினார்.
இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றுக்கும் இறக்குமதி வரியை அதிகளவில் விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுக்கு சலுகை காட்டினார்.
அந்த நாட்டுடன், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப் போவதாகவும் கூறினார். அமெரிக்காவின் இந்த திடீர் நெருக்கத்துக்கு இடையே, அசிம் முனீர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு, புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அசிம் முனீர் நேற்று பேசியதாவது:
சிந்து நதி, இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல; பாகிஸ்தானுக்கும் சொந்தமானது. சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி வருகிறது. அது கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். பணிகள் முடிந்ததும், 10 ஏவுகணைகளை வீசி அணையை தகர்த்து விடுவோம்.
ஏவுகணைகளுக்கு எங்களிடம் பஞ்சம் இல்லை. பாகிஸ்தான் அணு ஆயுத நாடு. எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் எழுந்தால், உலகின் பாதி நாடுகளை அழித்துவிடும் வல்லமை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமெரிக்க மண்ணில் இருந்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல் விடுப்பது இதுவே முதல்முறை.
இது தொடர்பாக, அமெரிக்கா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
யாருக்கு பாதிப்பு?
நெடுஞ்சாலையில் பளபளப்பாக வரும் மெர்சிடஸ் கார் போன்றது இந்தியா. ஆனால், கரடு முரடான மண் லாரி போன்ற பாகிஸ்தான் மோதினால், யாருக்கு சேதம் ஏற்படும் தெரியுமா? அசிம் முனீர் பாகிஸ்தான் ராணுவ தளபதி