ADDED : ஜன 01, 2025 05:11 AM

'எதுக்கும் ஏமாற மாட்டேன்' என்று மார் தட்டுவோருக்குக் கூட, பணத்தாசை காட்டி, சலனத்தை ஏற்படுத்தி, மொத்த உழைப்பையும் சுருட்டிக் கொண்டு விடும் மோசடியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கென்று தனி அடையாளம் கிடையாது; ஏன்... யாரென்றே கூடத் தெரியாது.
அழகாகப் பேசுவார்கள்; அவர்கள் அனுப்பும் புகைப்படங்கள் அழகாகக் கவனத்தை ஈர்க்கும். 'அடடே... நம் மேல் இப்படி அக்கறையுள்ள நபரா?' என்று மனதால் உருகித்தான் போவோம். அப்படி உருகிவிட்டால், சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் அவர்களது துாண்டிலில் நீங்கள் சிக்கிவிட்டீர்கள் என அர்த்தம். இனி, அவர்களது பணி எளிதாகிவிடும்.
பேராசை பெருநஷ்டம்
ஓட்டல், உணவு, மேப் ரிவ்யூ போன்றவற்றுக்கு ரேட்டிங் கொடுத்து, பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம், வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம். அதிக 'டாஸ்க்'குகளை முடிப்பவர்களுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும். பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.
இப்படியெல்லாம் ஆசை காட்டுவார்கள்; மனம் சலனப்படும். ஆசையை பேராசையாக்கும்போது, கனவு உலகில் நடப்பது போல் மனதிற்குள் ஆயிரம்மின்னல்கள் பளீரிடும்.
இருப்பதையெல்லாம் கறந்த பின், அனைத்தையும் நிராசையாக்கிவிட்டு மோசடிக்கும்பல் மாயமாகிவிடும். திருப்பூரில் இப்படி ஏமாறுவோர் அதிகம். 'டிஜிட்டல் அரெஸ்ட்'டில் லட்சக்கணக்கில் பறிகொடுத்தவர்கள் உண்டு.
இவர்கள் இரையாகலாமா?
மக்களிடம் இருந்து பணம் பறிக்கவும், போலீசிடம் சிக்காமல் இருக்கவும் ஏகப்பட்ட யுத்திகளை மோசடியாளர்கள் கைவசம் வைத்துள்ளனர். மெத்தப் படித்தவர்கள், உயர்ந்த பணிகளில் உள்ளவர்கள், சுய தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பலரும், மோசடிக்கு இரையாவதுதான் கொடுமை.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ''திருப்பூரில் கடந்த ஆண்டில், கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி மோசடியாளர்களிடம் ஏமாந்தவர்கள் அதிகம். வாரத்துக்கு, ஒன்றிரண்டு புகார் வந்து விடுகிறது. மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். புத்தாண்டில், மோசடியாளர்களிடம் இருந்து ஏமாந்துவிடக்கூடாது. இது நம் சபதமாக அமையட்டும்'' என்றனர்.

