கோவை மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் போலீசார் கூறிய தகவலில் முன்னுக்குப் பின் முரண்
கோவை மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் போலீசார் கூறிய தகவலில் முன்னுக்குப் பின் முரண்
UPDATED : நவ 06, 2025 05:59 AM
ADDED : நவ 06, 2025 05:37 AM

கோவை: கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் கூறிய தகவலுக்கும், உண்மையில் நடந்ததற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் பரவலான பேச்சு எழுந்துள்ளது.
கோவையில் கடந்த, 2ம் தேதி இரவு விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் நண்பருடன் காரில், கல்லுாரி மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர் காரை உடைத்து, இளைஞரை வெளியில் இழுத்து தாக்கினர். மாணவியை ஒன்றரை கி.மீ., துாரம் இழுத்துச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20 ஆகிய மூவரை, போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
போலீஸ் கூறுவதில் முரண்
இச்சம்பவத்தில் போலீசார் கூறிய சம்பவத்துக்கும், உண்மையில் நடந்ததற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. கடந்த, 2ம் தேதி சம்பவம் நடந்த பின், அதிகாலை 3.00 மணிக்கு இளைஞர் போன் செய்ததாக போலீசார் கூறினர். ஆனால், மாநகர போலீஸ் கமிஷனர் தனது பேட்டியில், போலீசாருக்கு இரவு 11:20 மணிக்கு இளைஞர் போன் செய்ததாகவும், போலீசார் 11:35 மணிக்கு சம்பவ இடத்துக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், மாணவியை நான்கு மணி நேரத்துக்கும் மேல், 100 போலீசார் தேடியதாகவும், போலீசாரே மாணவியை மீட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், உண்மையில் மாணவி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால், முதல் மாடிக்கு சென்று, வீட்டில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன் பின் அனைவரும் மாணவியை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நடந்தது இப்படி இருக்க, பெண்ணை அப்பகுதியில் இருந்த சுவர் ஒன்றின் பின்புறம், மூவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் அங்கு இருந்ததால், தங்களால் கண்டறிய முடியவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் தெரிவிக்கும் அந்த சுவரின் உயரம் குறைவாகவே உள்ளது. அப்படி இருக்கையில், 100 போலீசார் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது, நம்பும்படியாக இல்லை.
போலீசார் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

