UPDATED : மே 26, 2026 07:54 AM
ADDED : மே 26, 2026 06:02 AM

- டி.ஆர்.ரமேஷ்
தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்
ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ரமேஷ், முதல்வர் விஜயின் நம்பிக்கைக்கு உரியவராக அறநிலையத்துறையின் அமைச்சராகப் பதவி ஏற்ற இளம் சாதனையாளர். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம். கடந்த, 2009ல் இருந்து, கோவில்கள் நலனுக்காக சட்ட போராட்டம் நடத்தி வரும் வழிபாட்டாளனாக, எனக்கு ரமேஷிடம் பல கோரிக்கைகள் கோவில் நலனுக்காக இருக்கின்றன. அவற்றை தமிழக கோவில் வழிபாட்டாளர்களும் ஆமோதிப்பர் என்றும் நம்புகிறேன்.
1. தற்போது அமைந்துள்ள த.வெ.க., ஆட்சி வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். அறநிலையத்துறை இனியாயினும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும். 2005 முதல் இத்துறை செய்ய தவறிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தானே முன் வந்து தர வேண்டிய தகவல்களை உடனடியாகத் தர வேண்டும். தகவல் உரிமை விண்ணப்பங்களை பெற்று, சட்ட விரோதமாக தகவல் மறுக்கும் அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம், அறநிலையத்துறை செய்ய வேண்டிய, செய்யக் கூடாத செயல்கள் குறித்து தெளிவான விரிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அவற்றை இந்த துறை வேண்டுமென்றே உதாசினம் செய்து வருகிறது. 07.06.2021 அன்று வந்த தீர்ப்பில், அமர்வு வழங்கிய 75 வழிகாட்டுதல்களில் ஒன்று கூட இந்த துறை நிறைவேற்றவில்லை; பின்பற்றவில்லை. 50 முக்கிய கோவில்களின் தணிக்கை அறிக்கைகளை துறை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் பதிவேற்றம் செய்ய, நீதிமன்ற அமர்வு இரு முறை உத்தரவிட்டும், துறை அந்த உத்தரவுகளை அவமரியாதை செய்துள்ளது. இதில் உடனடி மாற்றம் தேவை.
3. 21ம் நுாற்றாண்டில் கால் பகுதி கடந்தும், 19ம் நுாற்றாண்டு கணக்கு முறைகள் தான், இந்தத் துறை கோவில்களில் பின்பற்றபடுகிறது. இது மிகத் தவறான விஷயம். இரட்டைப் பதிவு கணக்கு முறை உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும். கணக்குகள் நிதி ஆண்டு முறையில் பராமரிக்கப்பட்டு பட்டய கணக்கர்கள் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
4. 1986 முதல் 20 லட்சம் கோவில் தணிக்கை ஆட்சேபங்கள் தீர்வு செய்யப்படாமல் இருக்கின்றன. இவற்றை மாவட்டம் தோறும் பட்டய கணக்கர்கள் குழு அமைத்து, அறநிலையத்துறை சட்டத்தில் சொன்னபடி தீர்வு செய்யவேண்டும். தற்போது துறை மோசடியாக பின்பற்றும் கூட்டமர்வு முறை சட்ட விரோதம்; அது ஒழிக்கப்பட வேண்டும்.
5. பல கோவில்களில் சட்டப் பிரிவு 29, 30, 31 பதிவேடுகள் பராமரிக்கப்படுவதில்லை. இது கிரிமினல் குற்றம். உடனடியாக இவற்றைப் பராமரிக்க ஆவண செய்ய வேண்டும். 50 முக்கிய கோவில்களின் பிரிவு 29 பதிவேடு தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
6. கடந்த 15 ஆண்டுகளில் கோவில் பணம் கோடிக்கணக்கில் துறை செலவிற்காக எடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் வட்டியுடன், அந்தந்த கோவில்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். பல கோவில் இடங்களை ஆக்கிரமித்து, அறநிலையத்துறை கோவில் பணத்தை எடுத்து அலு வலகங்கள் காட்டியது. இவற்றுக்கு முறையான வாடகையும் தருவதில்லை. இவை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை தரப்பட வேண்டும்.
7. வேதாரண்யம் கோவிலின் 2,400 ஏக்கர் உப்பளங்களை மத்திய அரசு வைத்துக்கொண்டு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 2.50 ரூபாய் கொடுக்கின்ற கேவலமான நிலைமையை மாற்ற வேண்டும். வேதாரண்யம் கோவிலின், 27,000 ஏக்கர் நிலங்கள், திருச்செந்துார் கோவிலின் 3,000 ஏக்கர் நிலங்கள், ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோவிலின் 4,500 ஏக்கர் நிலங்கள், சென்னையில் கபாலீஸ்வரர் கோவிலின் 800 கிரவுண்ட் நிலங்கள், சென்னையில் 600 கிரவுண்ட் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிலங்கள், திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலின் நிலங்கள், வைத்தீஸ்வரன் கோவிலின் 7,282 ஏக்கர் நிலங்கள், திருவிடைமருதுார் கோவிலின் 2,500 ஏக்கர் நிலங்கள், திருக்கடவூர் கோவிலின் 2,744 ஏக்கர் நிலங்கள், திருவெண்காட்டு நிலங்கள் 1,613 ஏக்கர்கள் இவை குறித்து வெள்ளை அறிக்கைகள் உடனடியாகத் தேவை.
8. முக்கியமாக கோவில் உள்துறை விஷயங்களில், பூஜை முறைகளில் இந்த துறை அதிகாரிகள் தலையிட அறநிலையத்துறைச் சட்டப் பிரிவு 105 தடை செய்கிறது. இந்த சட்டம் துறை அதிகாரிகளால் மதிக்கப் படவேண்டும். மத விஷயங்களில் பூஜை விஷயங்களில் எந்த குறுக்கீடும் கூடாது.
9. கடந்த ஒரு ஆண்டில், தி.மு.க., அரசு, நான்கு, கோவில் சட்ட விரோத திருத்தங்கள் கொண்டு வந்தது.
* கோவில் பணத்தில் எந்த கட்டுமானம் வேண்டுமானாலும் பிரிவு 35ன் கீழ் செய்யலாம் என்ற சட்ட திருத்தம்
* கோவில் நிலங்களின் குத்தகையை குறைக்கும் விதிகள் திருத்தம்
* கோவில் நிலங்களை பரிமாற்றம் செய்யலாம் என்ற விதி திருத்தம்
* மிக மோசமான நிதி நிலை அறிக்கையுடைய பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற விதிகள் திருத்தம். இவை எல்லாம் திரும்பப் பெறப்பட வேண்டும்
10. கோவில் கட்டளை, திருமடங்கள் நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களை நீக்கி, நியாய வாடகை பெற்றால், ஆண்டு தோறும் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் பெறலாம். இவற்றைக் கொண்டு நலிவடைந்த கோவில்களில் பூஜை, நுாற்றுக்கணக்கில் கோசாலைகள், இந்து சமயமும் போதிக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லுாரிகள் அமைக்கலாம். சிற்பம், ஒவியம், கலைகள், ஆயுர்வேத கூடங்களும் அமைக்கலாம்.
ஒரு மிகப் பெரிய நன்மை தரும் மாற்றம் கொண்டு வர, முதல்வர் விஜய் ஆட்சியில் இதை நீங்கள் செய்தால், தமிழர்கள் ஒரு போதும் நன்றி மறவார்கள்.
