பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் திருமாவளவன், கம்யூ.,க்கள்; பா.ஜ., எச்.ராஜா குற்றச்சாட்டு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் திருமாவளவன், கம்யூ.,க்கள்; பா.ஜ., எச்.ராஜா குற்றச்சாட்டு
ADDED : மே 06, 2025 01:06 AM

திண்டுக்கல்: ''பாகிஸ்தானுக்கு ஆதரவாக வி.சி.க., தலைவர் திருமாவளவன், கம்யூ.,க்கள் அறிக்கை வெளியிடுகின்றனர் என பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக யுத்தம் அறிவிக்கவும் இல்லை, யுத்தம் வரும் என யாரும் சொல்லவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக சிந்து நதி நீர் பங்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வி.சி.க., தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கின்றனர். இங்குள்ள முஸ்லிம்கள் தேசபக்தர்கள். யுத்தம் அறிவித்தாலும் அவர்கள் இந்தியாவிற்கும், ராணுவத்திற்கும் ஆதரவளிப்பார்கள்.
மதுரையில் காவி உடை கட்டிய சாமியார் என்பதால் போலீசார் அவரை மிரட்ட வேண்டாம். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவு போட்டால் கைது செய்வோம் என போலீசார் அறிவித்திருக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலை திசை திருப்புவதற்காகவே ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என காங்கிரசார் பேசுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது ஆட்சியில் இருந்தது காங்., அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் எடுக்கவில்லை. பிரதமர் மோடி அதனை செய்வேன் என்று கூறியதும் அவர்களுக்கு என்ன வந்ததென என்று தெரியவில்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., தான். 2013 ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியிலே முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளது. தீர்வு வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் மனு போடலாம் என்றார்.

