திருமாவளவன் கனவுகள் நிறைவேறும்; 'ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை' என ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
திருமாவளவன் கனவுகள் நிறைவேறும்; 'ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை' என ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ADDED : நவ 21, 2024 01:18 AM

மதுரை: ''திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டசபை தேர்தலில் நிறைவேற்றப்படும். பிரச்னை வருவதை எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால் தான் தீர்வு கிடைக்கும்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
மதுரையில் திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வலதுசாரி, இடதுசாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் துர்பாக்கியம். தலித் மக்கள், சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் எதற்கு.
ஊழல் செய்வதற்காக இல்லை. கோயிலில் எல்லோரும் சமம் என்று செல்லும்போது தலித் மக்கள் இன்றைக்கும் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அங்கு தீண்டாமை இருக்கிறது.
தலித் மக்கள் கோபத்தை சொல்லும்போது வன்முறையாளர்கள். சிறுபான்மையின மக்கள் தங்களது உரிமையை கேட்கும்போது தீவிரவாதிகள். உரிமையை கேட்டால் சங்கி என்கிறார்கள். சேரிகளுக்கு என பட்ஜெட்டில் தனி ஒதுக்கீடு வேண்டும். இப்போது நிறைய பேர் 'டிவி'யில் என் ஜாதி பெயரை சொல்லி பேசுகிறார்கள். அவர்கள் முட்டாள்கள், பைத்தியக்காரர்கள். எனக்கே என் ஜாதி தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன். எனக்கு பதவி வேண்டும் என்றால் பல பதவி உள்ளது.
இந்த ஜாதி பெயரை சொல்லி கூப்பிடுவது யு டியூபில் கத்துவது இதையெல்லாம் 15 வயதில் அம்பேத்கார் புத்தகத்தை படிக்கும் போதே பார்த்துவிட்டோம். பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்ளலாம்.
பிரச்னை வருவதை தான் எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால் தான் தீர்வு கிடைக்கும். அமைதியா ரொம்ப வருஷம் இருந்துட்டோம்.
கொள்கை கூட்டணி, அதிகார கூட்டணி என்று சொல்வார்கள். அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள். கொள்கை கூட்டணி என்பது அதிகார கூட்டணி அல்ல. ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை.
எங்களுக்கான அரசியல், எங்களுக்கான பிரசாரத்தை உருவாக்க தெரியும். திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். இவ்வாறு பேசினார்.

