தி.மு.க.,வில் உழைத்தவர்கள் புறக்கணிப்பு: கட்சி மாறி வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி: பழனிசாமி கடும் விமர்சனம்
தி.மு.க.,வில் உழைத்தவர்கள் புறக்கணிப்பு: கட்சி மாறி வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி: பழனிசாமி கடும் விமர்சனம்
UPDATED : ஆக 18, 2025 05:11 AM
ADDED : ஆக 18, 2025 03:39 AM

சென்னை: ''அ.தி.மு.க.,வில் இருந்து 'டெபுடேஷனில்' தி.மு.க.,வுக்கு சென்றவர்கள், தமிழக அமைச்சர்களாக உள்ளனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கீழ்ப்பென்னாத்துார் பகுதிகளில், பிரசாரப் பயணத்தின்போது பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க., அமைச்சர்கள் பலர், அ.தி.மு.க.,வில் இருந்து போனவர்கள். அதாவது 'டெபுடேஷன்' எனப்படும், அயல் பணியில் அங்கே சென்றுள்ளனர். அமைச்சர் பதவிக்கு தி.மு.க.,வில் ஆட்களே இல்லை. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பவர்களில், எட்டு பேர் அ.தி.மு.க.,வில் இருந்து சென்றவர்கள்.
பச்சை குத்தினார் தி.மு.க.,வில், காலம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்படுகின்றனர். அ.தி.மு.க.,வில் இருந்து போனவர்கள், நல்ல துறைகளை வாங்கி செழிப்பாக இருக்கின்றனர்.
அ.தி.மு.க., ஜனநாயகப் பூர்வமான கட்சி. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால், என்னைப்போல் பொதுச்செயலராக முடியும். தி.மு.க.,வில் அப்படி வர முடியுமா?
இங்கிருந்து இடம் பெயர்ந்து அங்கு போனவர்கள், மேலிடத்திற்கு கப்பம் கட்ட வேண்டும். அப்போது தான், அமைச்சர் பதவி என்ற வண்டி ஓடிக் கொண்டிருக்கும். இல்லையெனில் 'கட்' பண்ணி விடுவர். அ.தி.மு.க.,வில் உழைத்தால் முதல்வராகலாம். தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தை தவிர, வேறு யாரும் அந்த பதவிக்கு வர முடியாது.
எம்.ஜி.ஆர்., இருந்தபோது, கட்சியினருக்கு, அ.தி.மு.க., கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்தி விட்டார். இப்போதுதான் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
தனக்கு பின்னாலும், அவர்கள் அ.தி.மு.க.,விலேயே இருக்க வேண்டும் என்பதற்கு அப்படி எம்.ஜி.ஆர்., அடையாளப்படுத்தி இருக்கிறார்.
'தீயசக்தி' யாரை 'தீயசக்தி' என எம்.ஜி.ஆர்., சொன்னாரோ, அவர்களிடமே போய் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர். அ.தி.மு.க.,வில் அரசியல் அடையாளம் பெற்று விட்டு, தி.மு.க.,வில் போய் வளமாக செழிப்பாக இருக்கின்றனர். எனக்கு யாரையும் பழி வாங்கும் நோக்கம் கிடையாது.
அப்படி இருந்து, முதல்வராக இருந்தபோது வழக்கு தொடர்ந்திருந்தால், இன்று பலர் அமைச்சர்களாக இருந்திருக்க முடியாது. அனைவரும் வேறொரு இடத்தில் இருந்திருப்பர். அ.தி.மு.க., அப்படியான வேலையை ஒருபோதும் செய்யாது.
இந்தியாவில் கடன் வாங்குவதில், சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்; அந்த கடனை மக்கள் தான் திரும்பக் கட்டணும். அரசு பணிகளில், 5.50 லட்சம் காலி இடங்கள் நிரப்பப்படும் என்றார்.
ஆனால், 50,000 தான் நிரப்பினார். அத்தனையும் பொய். பழைய ஓய்வூதிய திட்டம் கொடுப்போம் என்றார். இப்போது பட்டை நாமம் போட்டு விட்டனர். அவர்களும் போராடி களைத்து விட்டனர்.
போலீசாரை கண்டு குற்றவாளிகள் பயப்படுவதே இல்லை. ஆறு மாதங்களில், ஆறு காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இனிமேல் ராணுவம் தான், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது.
தி.மு.க., - -எம்.எல்.ஏ., நடத்தும் மருத்துவமனையில், கிட்னியை திருடி விற்கின்றனர். அப்படி செய்யாவிட்டால், நான் எப்படி உயர் ரக கார் வாங்கி இருக்க முடியும்? என, அந்த எம்.எல்.ஏ., பேசுகிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.

