2 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் பற்றாக்குறை; தானியங்கி தொழில்நுட்பம் தீர்வு தரும் என நம்பிக்கை
2 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் பற்றாக்குறை; தானியங்கி தொழில்நுட்பம் தீர்வு தரும் என நம்பிக்கை
ADDED : ஏப் 14, 2025 06:23 AM

திருப்பூர் : திருப்பூரில், 2 லட்சம் தொழிலாளர்கள் வரை பற்றாக்குறை உள்ள நிலையில், 'சோபோட்ஸ்' என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை செயல்படுத்தினால், உலகளாவிய தானியங்கி ஆடை உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என்கின்றனர் தொழில் வல்லுநர்கள்.
திருப்பூரில் உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள், 5,000க்கும் மேல் உள்ளன. இதுதவிர நிட்டிங், சாயம், எம்ப்ராய்டரி உள்ளிட்ட நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. 'திருப்பூருக்கு தற்போதைய தொழிலாளர் தேவை, 10 லட்சம் பேர். நாட்டின், 21 மாநிலங்களை சேர்ந்த, 2.50 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 8 லட்சம் பேர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். 'கூடுதலாக, 2 லட்சம் தொழிலாளர் தேவைப்படுகின்றனர்' என்கின்றனர் தொழில் துறையினர்.
வடமாநில அரசுகளின் திறன் வளர்ப்பு திட்டத்தில், வடமாநில தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, திருப்பூருக்கு அனுப்பி வைக்குமாறு, வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'தொழிலாளர் பற்றாக்குறை நாளுக்கு நாள் பெரிய சவாலாக மாறியுள்ளதால், தானியங்கி தொழில்நுட்பத்துக்கு மாறுவதே சரியான தீர்வு. அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள், தானியங்கி தொழில்நுட்ப இயந்திரங்களை வடிவமைக்க துவங்கி விட்டன. இனி வரும் நாட்களில், திருப்பூரிலும், 'சோபோட்ஸ்' போன்ற தானியங்கி தொழில்நுட்பமே, தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், உற்பத்தியை பெருக்கவும் சரியான வழியாக இருக்கும்' என்கின்றனர் தொழில்துறையினர்.
இந்திய துணி மற்றும் ஆடை உற்பத்தி துறையில், தானியங்கி தையல் ரோபோ தொழில்நுட்பமான சோபோட்ஸ் நடைமுறைக்கு வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. -துணி தைப்பதற்கு அதிக பணியாளர் தேவைப்படுகின்றனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், தானியங்கி முறை அதிகரித்து வருகிறது. சோபோட்ஸ் என்பது, 'ரோபோடிக்' தையல் முறை.
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒருங்கிணைத்து, ஆடைகளை தைக்க உதவும் தொழில்நுட்பம். தவறு நேர்வதை குறைத்து, வேகத்தையும், தரத்தையும் மேம்படுத்தும் வகையில் உற்பத்தி கண்காணிக்கப்படுகிறது.
'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''இந்தியாவில், 4.50 கோடி தொழிலாளர்கள் துணி மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சோபோட்ஸ் தொழில்நுட்பம் முழுமையாக அமலாகவில்லை; ஆரம்ப நிலையில் இருக்கிறது. கூடுதல் முதலீடு தேவை என்பதால், நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
''வரும், 2030 முதல் தானியங்கி தொழில்நுட்பம் இந்தியாவிலும் அதிகரிக்கும். மத்திய அரசும், தொழில்துறையும் இணைந்து, இத்தொழில்நுட்பத்தை புகுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தினால், உலகளாவிய தானியங்கி ஆடை உற்பத்தி மையமாக இந்தியா மாறும்,'' என்றார்.