எங்கு அமைகிறது ஒசூர் விமான நிலையம்? காத்திருக்கிறது ‛டிட்கோ'
எங்கு அமைகிறது ஒசூர் விமான நிலையம்? காத்திருக்கிறது ‛டிட்கோ'
UPDATED : அக் 23, 2024 04:05 AM
ADDED : அக் 22, 2024 09:32 PM

சென்னை: ஓசூர் விமான நிலையம் அமைக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் தேர்வு செய்த நான்கு இடங்களில், இந்திய விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள், செப்டம்பர் இறுதியில் ஆய்வு செய்தனர்.
இத்திட்டத்திற்கு போட்டியாக, ஓசூர் அருகேயுள்ள சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. எனவே, ஓசூர் விமான நிலைய திட்டப்பணிகளை விரைவாக துவக்க, ஏ.ஐ.ஐ., முடிவை எதிர்பார்த்து, டிட்கோ காத்திருக்கிறது.
போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் உருவெடுத்துள்ளது. அங்கு, டாடா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், ஏற்கனவே தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதுதவிர, மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி ஆலைகளும் துவக்கப்பட்டு வருகின்றன.
தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விமானத்தில் சென்று, சாலை மார்க்கமாக ஓசூர் செல்கின்றனர். பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது.
ஓசூரில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களின் பயண நேரத்தை குறைக்கவும், அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களை தேர்வு செய்தது. அவற்றை, ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திடம் வழங்கி, சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து தர வலியுறுத்தியது. ஆணைய அதிகாரிகள் நான்கு இடங்களில், செப்டம்பர், 29ல் ஆய்வு செய்தனர்.
சாதகமான சூழல்
அதில் எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது என்பதை தெரிவித்த பின், அங்கு, விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டியுள்ள சோமனஹள்ளியில், சர்வதேச விமான நிலையம் அமைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஓசூருக்கும், சோமனஹள்ளிக்கும் இடையேயான துாரம், 50 கி.மீட்டருக்கும் குறைவு.
ஓசூர் விமான நிலைய அறிவிப்பால்தான், சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்கும் பணியை துவக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, ஓசூர் விமான நிலையப் பணிகளை விரைவாக துவக்கும் வகையில், இடத்தேர்வுக்கு, ஏ.ஐ.ஐ., அனுமதியை எதிர்பார்த்து, டிட்கோ காத்திருக்கிறது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நான்கில் எந்த இடம் சாதகமாக உள்ளது என்பதை, ஏ.ஏ.ஐ., பரிந்துரை செய்ய வேண்டும். அந்த இடம் தேர்வு செய்யப்பட்டால்தான் இட அனுமதி, திட்ட அனுமதி என, விமான நிலையம் அமைக்கும் பணிகளில் ஈடுபட முடியும். எனவே, விரைந்து ஆய்வு முடிவை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.