'கஞ்சா கடத்தல் எக்ஸ்பிரஸ்'களாக மாறும் ரயில்கள்: கடத்தல்காரர்களின் யுக்திகளால் திணறும் போலீஸ்
'கஞ்சா கடத்தல் எக்ஸ்பிரஸ்'களாக மாறும் ரயில்கள்: கடத்தல்காரர்களின் யுக்திகளால் திணறும் போலீஸ்
ADDED : டிச 23, 2025 10:56 AM

சேலம்: ஒடிசா, ஆத்திராவில் இருந்து, தமிழகம், கேரள மாநிலங்கள் செல்லும் ரயில்கள், கஞ்சா கடத்தல் எக்ஸ்பிரஸ்களாக மாறியுள்ளன. கடத்தல்காரர்களின் பல்வேறு யுக்திகளால், போலீசாரும் தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தின் பாடேரு, அரக்கு பள்ளத் தாக்கு, சிந்தப்பள்ளி, மாடு குலா, முஞ்சிங்கி புட்டு உள்ளிட்ட பகுதிகள், ஒடிசா மாநிலத்தின் மல்கான்கிரி, கோராபுட், கஜபதி, ராய கடா, கந்தமால் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உற்பத்தி அதிக அளவில் உள்ளது. அங்கு அடர்ந்த காடுகள், மலைக்குன்றுகள், சாலை வசதி இல்லாத இடங்கள் என, புவியியல் அமைப்பின் காரணமாக, சாயம் செய்யும் நிலை உள்ளது. மக்கள், கஞ்சாவை விவசாயம் செய்யும் நிலை உள்ளது. அங்கு ஒரு கிலோ கஞ்சா, 3,000 முதல், 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அங்கிருந்து தமிழகம், கேரள மாநிலங்களுக்கு கடத்தி வரும் போது, கிலோ, 20,000 முதல், 23,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திராவில் விளையும், கஞ்சா, 50,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதில் பல மடங்கு லாபம் கிடைப்பதால், வட மாநில தொழிலாளர்கள் பலரும், இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
'ட்ரிக்ஸ்' என்ன?
சாலை 'மார்க்கமாக கஞ்சா கடத்தும்போது, பல் வேறு சோதனைச்சாவடிகள், மாநில போலிசாரின் கெடு பிடியை கடந்து கடத்துவது கடினம். ஆனால், ரயிலில் கடத்துவது மிக எளிது. அதிகபட்சம், 10 கிலோ அளவுக்கு, 'டிராவல் பேக்'கில் வைத்து, வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வருவது போன்று, கடத்தல்காரர்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். போலீசார் சோதனையில் மாட்டிக் கொள்ள நேர்ந்தால், பைகளை விட்டு கழிப்பறைக்குள் நுழைந்தோ, அடுத்த ஸ்டேஷன்களில் இறங்கியோ தலைமறைவாகின்றனர். இதனால்தான் பெரும்பாலான சோதனைகளில், 'கேட்பாரற்ற கஞ்சா' பைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்படுகின்றன.
தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், தினமும் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் கிளம்பி ஒடிசாவின் ரூர்கேலா, ஜார்க்குடா, சம்பல்பூர், தித்லாகர், ராய கடா, ஆந்திராவின் பார்வதிபுரம், விஜயநகரம், விசாகப்பட்டினம், ராஜமுத்திரி, விஜயவாடா, நெல்லுார், சென்னை, அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே கேரள மாநிலம் ஆலப்புழா செல்கிறது.
இந்த ரயில், கஞ்சா உற்பத்தியாகும் ஒடிசா, ஆந்திரா பகுதிகளையும், அதன் தேவை அதிகம் உள்ள தமிழகம், கேரள பகுதிகளையும் இணைப்பதால், 'கஞ்சா எக்ஸ்பிரஸ்' ஆக மாறியுள்ளது.
போலீஸ் திணறல்
இதே தடத்தில் இயக்கப்படும், டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், ஹவுரா -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவையும், கஞ்சா கடத்தல்காரர்களின் விருப்ப ரயில்களாக மாறியுள்ளன. இந்த ரயில்கள், ரயில்வே பாதுகாப்பு படையின், 'ஹாட் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு, கஞ்சா கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், ரயிலில் உள்ள கூட்ட நெரிசல், கடத்தல்காரர்களின் யுகதிகள், போலீசை திணறடிக்கின்றன.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது :
எதிர்ப்பு:
கஞ்சா கடத்தல் அதிகம் உள்ள ரயில்கள் கண்டறியப்பட்டு ஹாட் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சோதனை செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த ரயில்களில் அனைத்து நாட்களிலும் கூட்ட நெரிசல் இருப்பதால் கஞ்சா கடத்தலை முழுமையாக தடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
'குடும்பம்' போல் சிலர் சேர்ந்து வரும்போது சோதனை செய்ய கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நெரிசலில் அனைவரது பைக ளையும் சோதனை செய் வதும் சவாலான விஷயம், அதை தாண்டி, கஞ்சா உள்ள பையை கைப்பற்றினால், அதற்கு யாரும் உரிமை கோருவதில்லை. மற்ற பயணியரும் கூட காட்டி கொடுப்பதில்லை.
ஒட்டுமொத்தமாக கடத்தாமல் சுறுசுறு பொட்டலங்களாக பிரித்து உடைமைகளுடன் கலந்து எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் அதற்கு நல்ல விலை கிடைப்பதால் பல மடங்கு லாபம் கிடைக்கிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும், 50 கிலோவுக்கும் மேல், பல மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது மொத்த கடத்தலில், 1 சதவீதம் கூட இருக்காது, இங்கு கூலித் தொழில் செய்யும் வடமாநிலத்தவர்கள், ஊர் சென்று திரும்பும் போது, இதையும் ஒரு 'சம்பாதிக்கும்' வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.'
தமிழகத்தில் கஞ்சாவை வாங்கவிடாமல் இடைத்தரகர்களையும், வெளியே விற்கும் சில்லறை விற்பனையாளர்களையும் ஒழித்தால் மட்டுமே, கஞ்சா கடத்தலை தடுக்க முடியும். இதற்கு அனைத்து தரப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

