வக்பு மசோதா கூட்டத்தில் வாக்குவாதம்; பாட்டிலை வீசிய திரிணமுல் எம்.பி.,
வக்பு மசோதா கூட்டத்தில் வாக்குவாதம்; பாட்டிலை வீசிய திரிணமுல் எம்.பி.,
UPDATED : அக் 23, 2024 03:59 AM
ADDED : அக் 23, 2024 02:00 AM

நாடு முழுதும் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் கடந்த ஆகஸ்ட் 8ல் மத்திய அரசு தாக்கல் செய்தது.
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது அந்த குழு பல்வேறு மாநிலங்களில் உள்ள வக்பு வாரியங்களின் நிர்வாகிகள், முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட இது சார்ந்த பல்வேறு தரப்புகளை நேரில் அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த கூட்டத்துக்கு, வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் என சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். 'இவர்களுக்கும், இந்த மசோதாவுக்கும் என்ன சம்பந்தம்; எதற்காக அழைக்கப்பட்டனர்' என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இருதரப்பும் கடும் வாக்குவாதத்தில் இறங்கின.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற திரிணமுல் காங்., - எம்.பி., கல்யாண் பானர்ஜி மற்றும் பா.ஜ., - எம்.பி., கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கல்யாண் பானர்ஜி, குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் உடைக்கவே, அவர் கைகளில் காயம் ஏற்பட்டது. அவர், அதை தன் மீது எறிய பார்த்ததாக கூறி, அபிஜித் கங்கோபாத்யாய் குற்றஞ்சாட்டி ஆவேசப்படவே நிலைமை களேபரமானது.
டாக்டர்கள் உடனடியாக விரைந்து வந்து கல்யாண் பானர்ஜியின் பெருவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுப்போட்டனர்.
இதையடுத்து நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி, அவரை நாள் முழுதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அடுத்த இரண்டு கூட்டங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

