தேர்தல் கமிஷனுடன் மோத தயாராகும் திரிணமுல்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் அச்சம்
தேர்தல் கமிஷனுடன் மோத தயாராகும் திரிணமுல்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் அச்சம்
ADDED : ஆக 22, 2025 12:16 AM

பீஹாரில் ஓட்டளிக்க தகுதியற்ற, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட காரணமாக இருந்த, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கு வங்கத்தில் நடத்த விடக்கூடாது என்ற குரல், அம்மாநிலத்தில் இப்போதே உரக்க ஒலிக்க துவங்கி உள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக ஊடுருவி, மேற்கு வங்க குடியுரிமை பெற்று வசித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
அச்சம்
அப்படி குடியேறியவர்களில் பெரும்பாலானோர், மம்தாவின் ஆளும் திரிணமுல் காங்கிரசை ஆதரிக்கின்றனர்.
அப்படியிருக்கையில், பீஹாரை போல மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தால், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதுவே திரிணமுல் காங்கிரசின் அச்சத்துக்கு காரணம்.
எங்கே தங்கள் ஓட்டு வங்கி சிதைந்து விடுமோ என்ற பதற்றம் மம்தாவுக்கு ஏற்பட்டிருப்பதாக பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம், தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்த, மத்திய அரசு தேடிய குறுக்கு வழி இது என, திரிணமுல் காங்., விமர்சித்துள்ளது.
தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருக்கும் சூழலில், மோசடி ஆவணங்கள் காண்பித்து 127 வாக்காளர்களை சேர்த்ததாக கூறி, மாநில அரசு அதிகாரிகள் நான்கு பேரையும், கணினி ஆப்பரேட்டர் ஒருவரையும் எப்படி தற்காலிகமாக பணியில் இருந்து கமிஷன் நீக்கலாம் எனவும் கேள்வி கேட்டுள்ளது திரிணமுல்.
மேற்கு வங்கம், தமிழகம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளுமா? குஜராத், உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ., தனித்து ஆளும் மாநிலங்களில் பலத்தை காட்டாதா? என திரிணமுல் காங்., தலைவர்களான அபிஷேக் பானர்ஜி, சுஷ்மிதா தேவ் ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதில் சுஷ்மிதா தேவ், ஒருபடி மேலே சென்று, 'தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை கிரிக்கெட் சூதாட்டம் போன்றது' என கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
வங்கமொழி பேசுவோரை வேண்டுமென்றே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சி என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
முத்திரை
இந்த சண்டைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தால், வங்கமொழி பேசும் லட்சக்கணக்கானோர் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
அவர்கள் அனைவரும் வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என்ற முத்திரை குத்தப்படும். அதற்காகவே மிக நுணுக்கமாக தேர்தல் கமிஷன் வழியாக இந்த நடவடிக்கையை பா.ஜ., முன்னெடுத்திருக்கிறது என்கின்றனர் திரிணமுல் தலைவர்கள்.
- நமது சிறப்பு நிருபர் -

