மூவர் கொலை வழக்கு; முடிச்சுகள் அவிழுமா? குற்றவாளிகளை கைது செய்யும் முனைப்பில் காவல்துறை
மூவர் கொலை வழக்கு; முடிச்சுகள் அவிழுமா? குற்றவாளிகளை கைது செய்யும் முனைப்பில் காவல்துறை
ADDED : டிச 08, 2024 02:43 AM

பல்லடம் அருகே தந்தை, தாய், மகன் என மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் பல்வேறு சவால்களை போலீசார் எதிர்கொண்டுள்ளனர். ஒருபுறம் எதிர்க்கட்சியினர், விவசாய அமைப்பினர் காவல்துறையை 'பங்கம்' செய்துகொண்டிருக்க, குற்றவாளிகளை விரைவில் கைது செய்துவிடுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர், காவல்துறையினர். கொலை நடந்த நேரத்தில் வலம் வந்ததாக கூறப்படும் கார்கள்; கிடைத்த கைரேகைகள் போன்றவற்றை கொண்டு, தங்கள் மூளைகளைக் கசக்கியவாறு, குற்றவாளிகளைக் கண்டறிவதில் தீவிரம் காட்டுகின்றனர்.
பல்லடம் அடுத்த பொங்கலுார், சேமலைகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78; இவரது மனைவி அலமேலு, 75. தம்பதி தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். இவரது மகன் செந்தில்குமார், 46. கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை தந்தை, தாய், மகன் ஆகியோர் கொடூரமாக முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டனர். அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை யினர் விசாரணையை துவக்கினர்.
விமர்சனம் எதிர்கொள்ளும் போலீஸ்
படுகொலை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆளும் தி.மு.க., அரசு மற்றும் போலீசார் மீது கடுமையான விமர்சனங்களைவைத்தனர். இதுபோன்ற கொலைகள் தொடர்வதை, போலீசார் கட்டுப்படுத்த தவறி விட்டதாக போராட்டங்களில் ஈடுபட்டனர். வரும் சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்கட்சியினர் இதுதொடர்பான பிரச்னையை எழுப்புவர் என்பதால், வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
14 தனிப்படைகளுடன் முனைப்பு
எஸ்.பி., உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி., தலைமையில், 14 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை துவக்கினர். முதல் கட்டமாக, கொலை நடந்த நேரத்தின் போது, பதிவான மொபைல் போன் சிக்னல், சுற்றுவட்டாரத்தில் எங்கெங்கு 'சிசிடிவி' கேமரா உள்ளது என்பதை கண்டறிந்து பதிவுகளை பார்வையிட்டனர். வீட்டில் சில கி.மீ., துாரத்தில் பி.ஏ.பி., வாய்க்கால் உள்ளதால், ஓடை வழியாக ஏதாவது தப்பித்து சென்றார்களா என்று பார்வையிட்டனர்.
மாயமான நகை, மொபைல் போன்
கொல்லப்பட்ட அலமேலு கழுத்தில் இருந்த, ஆறு சவரன் நகை, செந்தில்குமாரின் மொபைல் போன் போன்றவை மாயமாயிருந்தன. வீட்டில் பொருட்கள் கலைந்து இருந்த நிலையில், வேறு ஏதுவும் திருடு போகவில்லை. சில நாட்கள் முன் தேங்காய் விற்ற பணம் சில லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தனர். பணம் திருடு போகவில்லை.
முன்விரோதம் போன்ற காரணங்களால் ஏற்பட்டதா என்று விசாரித்தனர். குடும்ப பின்னணி, உறவினர்கள், நண்பர்கள் என, யாரிடமாவது முன்விரோதம் உள்ளதா மற்றும் தோட்டத்தில் வேலையில் இருந்த நிறுத்தப்பட்ட தம்பதி மீது சந்தேகப்பட்டு அழைத்து வந்து விசாரித்தனர். எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. மாயமான போனும், இதுவரை 'ஆன்' செய்யப்படாமல் உள்ளது.
கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க எஸ்.பி., கண்காணிப்பில் மாவட்ட அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒரு பக்கம் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மற்றொரு பக்கம் டி.ஐ.ஜி., கண்காணிப்பில் மற்ற மாவட்டங்களில் நடந்த பல கொலை வழக்குகளை, இதனுடன் ஒப்பிட்டு விசாரித்தும் வருகின்றனர்.
86 கொலைகள் - 850 பேரின் விபரங்கள்
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினாலும், வழக்கு அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்ல முடியாமல் ஆரம்ப கட்டத்திலே இன்னும் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2011 முதல், 2024 வரை நடந்த, 86 கொலையில் தொடர்புடையவர்களின் விபரம் மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோன்று, 850 பேரின் விபரங்களை பெற்று, அதனுடன் இவ்வழக்கை ஒப்பிட்டு விசாரித்தனர். பழைய வழக்குகளில் தொடர்புடையவர்கள் இதில் தொடர்பு உள்ளார்களா என்று பார்த்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஐந்து ரேகைகள்
பழைய வழக்குகளில் தொடர்புடையவர்கள், இக்கொலையில் ஈடுபட்டார்களா என்று சில தனிப்படை குழு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீட்டில் கைப்பற்றப்பட்ட, ஐந்து கைரேகைகளை, காங்கயம், சென்னிமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கொடூர கொலையில் ஈடுபட்டவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. அதில், இரண்டு ரேகை மட்டும் உறுதிபடுத்தப்படவில்லை. அவை புதிய ரேகைகளாக உள்ளன. இதைக் கண்டறிந்து விசாரிப்பதற்காக 12 எஸ்.ஐ.,கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரு கார்கள் நடமாட்டம்
போலீசார் கூறியதாவது: கடந்த, ஒன்பது நாட்களாக பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் முடுக்கி விடப்பட்டு விசாரணை நடக்கிறது. ஏராளமான நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறையில் உள்ளவர்கள், வெளியே ஜாமீனில் வந்தவர்கள் என அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர்.
பல கட்ட விசாரணைக்கு பின் தற்போது, இரு கார்களின் நடமாட்டம் இருந்தது குறித்து தெரிய வந்தது. புதிய கொள்ளை கும்பல் தோட்டத்து வீட்டை நோட்டமிட்டு, தம்பதி தனியாக இருப்பதை கண்காணித்து உள்ளே வந்திருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான கார் குறித்து விசாரணை நடக்கிறது.
சென்னிமலை, காங்கயம் போன்ற இந்த கொலையில் ஈடுபட்டவர்கள், தடயங்களை விட்டு செல்லாமல், தங்களது கைரேகைகள் பதிந்து போகாமல் இருக்க 'க்ளவுஸ்' பயன்படுத்தியது, விசாரணைக்கு பெரிய சவாலாக அமைந்து விட்டது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்
- நமது நிருபர் குழு -.