மாவட்ட செயலர்களுக்கு எதிரான போராட்டம்: தி.மு.க., மீது த.வெ.க., தலைமை சந்தேகம்
மாவட்ட செயலர்களுக்கு எதிரான போராட்டம்: தி.மு.க., மீது த.வெ.க., தலைமை சந்தேகம்
UPDATED : டிச 26, 2025 08:12 AM
ADDED : டிச 26, 2025 04:01 AM

சென்னை: 'தங்கள் கட்சியின் மாவட்டச் செயலர்களுக்கு எதிரான போராட்டங்களை, தி.மு.க.,வினர் துாண்டி விடுகின்றனரோ' என, த.வெ.க., தலைமை சந்தேகிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க.,வுக்கு தமிழகம் முழுதும் 120 மாவட்ட செயலர்களை, அக்கட்சி தலைவர் விஜய் நியமித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர், பொருளாதார வசதி இல்லாதவர்கள். இவர்கள், ஆளும்கட்சிக்கு விலைபோய் விடுவர் என, முதலில் கூறப்பட்டது. ஒருவரும் கட்சி மாறவில்லை.
ஆனால், இரு சக்கர வாகனங்களில் வலம் வந்த பலர், தற்போது சொகுசு கார்களுக்கு மாறியுள்ளனர். தங்களுக்கு பதவிக்காக பரிந்துரை செய்த, மாநில நிர்வாகி ஒருவருக்கு மாதந்தோறும் ஒரு தொகையை வழங்குகின்றனர். மேலும், சென்னைக்கு வரும்போது, சொகுசு ஓட்டல்களில் தங்கி, ஆடம்பரம் காட்டுகின்றனர்.
அவர்கள், ஆளும்கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இதன் வாயிலாக வசதி வாய்ப்பு உருவானதாகவும் கூறப்படுகிறது. சிலர், பதவி பெற்றுத் தருவதாக கூறி, சொந்த கட்சியினரிடம் பல லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், த.வெ.க., மாவட்டச் செயலர்களுக்கு எதிராக, சொந்த கட்சியினரே, பல்வேறு மாவட்டங்களில், போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து, புகார் தெரிவிப்பதும் அதிகரித்துள்ளது.
இதன் பின்னனியில், ஆளும்கட்சி இருப்பதாக, த.வெ.க., தலைமை சந்தேகித்து வருகிறது. இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தேர்தல் நேரத்தில், த.வெ.க., வேட்பாளர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., தலைமை வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, சில மாவட்ட செயலர்களுடன், ஆளும் கட்சியினர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இது குறித்த தகவல், ஏற்கனவே கட்சி தலைவர் விஜய் கவனத்திற்கு வந்துள்ளது.
தற்போது, மாவட்டச் செயலர்களுக்கு எதிரான போராட்டத்தை துாண்டி, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும், முதல்கட்ட பணிகளை, தி.மு.க., தலைமை துவங்கி விட்டது. இதையறிந்த விஜய், சந்தேகத்திற்கிடமான மாவட்டச் செயலர்களை, அண்மையில், தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் 'வார் ரூமிற்கு' அழைத்து, எச்சரித்து அனுப்பியுள்ளார்.
அடுத்தகட்டமாக ஆளும்கட்சியினருடன் தொடர்பில் உள்ள மாவட்டச் செயலர்களை பதவியில் இருந்து விடுவிக்கவும் திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

