டிரம்ப் வரி தாக்குதல்: பலத்த அடி, ஆனால் காயமில்லை
டிரம்ப் வரி தாக்குதல்: பலத்த அடி, ஆனால் காயமில்லை
ADDED : ஏப் 04, 2025 06:18 AM

வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதால் ஏற்படும் வர்த்தக சமநிலை இல்லாமைக்கு தீர்வு காண்பதாக கூறி, இந்தியா உட்பட 60 நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் வரி விதித்திருக்கிறார். அதில், இந்திய பொருட்களுக்கு 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 9 வரை 10 சதவீதமாகவும்; அதன் பிறகு 17 சதவீதம் கூடுதலாகவும் என, இரண்டு கட்டங்களாக அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் டிரம்ப் காட்டிய வரி விதிப்பு நாடுகள் பட்டியல் பலகையில், அதிகபட்சமாக 97 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது இடம்பெற்றுள்ளது. இதில் 26 சதவீதமாக இருந்த இந்தியாவுக்கான வரி, பின்னர் 27 சதவீதம் என மாற்றி அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் முக்கியமாக பாதிக்கப்படும் துறைகள்
ஜவுளி, ஆடை
தாக்கம்: மிதமானது முதல் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இத்துறை 27% சுங்கவரியை எதிர்கொள்ளும். இது அமெரிக்க நுகர்வோருக்கு செலவை உயர்த்தி, இந்தியாவின் போட்டித்தன்மையை குறைக்கலாம்.
போட்டி நன்மை: வியட்நாம் (46% சுங்கவரி), வங்கதேசம் (37%), மற்றும் சீனா (34%) போன்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட உயர் சுங்கவரிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா பயனடையலாம்.
எதிர்காலம்: கலவையானது. குறுகிய காலத்தில் ஏற்றுமதி குறையலாம், ஆனால் நடுத்தர காலத்தில் போட்டியாளர்களின் இழப்புகளால் இந்தியா ஆதாயம் அடையலாம்.
மின்னணு பொருட்கள்
தாக்கம்: குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். 2024ல், அமெரிக்காவுக்கு இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் மின்னணு பொருட்கள் பங்கு 32 சதவீதம். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வரியால், கடுமையாக பாதிக்கப்படும். நெட்வொர்க்கிங் சுவிட்சுகள் மற்றும் ரூட்டர்கள் போன்ற பொருட்கள் விலை, அமெரிக்காவில் உயரும் என்பதால், தேவை குறையலாம்.
சவால்கள்: மாற்று சந்தைகள் கிடைக்காவிட்டால், இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தை பங்கை தக்கவைப்பதில் சிரமப்படலாம்.
எதிர்காலம்: அரசு ஊக்குவிப்புகள் அல்லது வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாவிட்டால் எதிர்மறையாக இருக்கும்.
ரத்தினங்கள், நகைகள்
தாக்கம்: குறிப்பிடத்தக்க அளவு. சுங்கவரி உயர்வை எதிர்கொண்டுள்ளது. இது அதன் விலை நன்மையை குறைக்கலாம். டிரம்புக்கு முன் சுங்கவரி குறைவாக அதாவது, வெறும் 2.12% சதவீதமாக இருந்தது. இப்போது 27 சதவீதமாக உயர்வு.
பின்னணி: அமெரிக்காவுடனான இந்தியாவின் 3.97 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக உபரி உயர்வுக்கு, இத்துறை குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. இதனால் இத்துறை இலக்காகி உள்ளது.
எதிர்காலம்: எதிர்மறையானது. பண மதிப்பு குறைப்பு அல்லது இது குறித்து பேச்சுகள் இல்லாவிட்டால், ஏற்றுமதி இழப்பு ஏற்படலாம்.
வாகனம், உதிரிபாகங்கள்
தாக்கம்: ஓரளவு கூடுதல் தாக்கம். வாகனங்கள் மற்றும் பாகங்களுக்கு ஏற்கனவே 25 சதவீதம் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் பெரிய புதிய பாதிப்புகள் இல்லை. இத்துறையில் தற்போதைய நிலையே தொடர்கிறது.
பின்னணி: அமெரிக்காவுக்கு இந்தியாவின் வாகன ஏற்றுமதி மிதமானது. ஏற்கனவே உள்ள சுங்கவரிகள், சந்தை செயல்பாட்டை வடிவமைத்து விட்டன.
எதிர்காலம்: நடுநிலையானது. புதிய அழுத்தங்கள் இல்லை.
ஐ.டி., மற்றும் சேவைகள்
தாக்கம்: மறைமுகமாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இந்திய- அமெரிக்க வர்த்தகத்தின் முக்கிய அங்கமாக இத்துறைகள் இருப்பதால், நேரடியாக சுங்கவரி விதிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு செலவு அதிகரிக்கும் என்பதால், இத்துறைக்கான அவர்களின் அவுட்சோர்சிங் பட்ஜெட்டை குறைக்கலாம்.
ஆபத்து: சுங்கவரிகளால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், டி.சி.எஸ்., இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கான தேவைகள் குறையலாம்.
எதிர்காலம்: அமெரிக்க பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை பொறுத்தது.
விவசாயம்
தாக்கம்: மிதமானது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விவசாய பொருட்கள், அளவு குறைவாக இருந்தாலும், கூடுதல் வரி விதிப்பால், மசாலா பொருட்கள், அரிசி, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வணிகத்தை பாதிக்கலாம்.
பின்னணி: இந்திய நிபுணர்கள் விவசாயத்தை பாதிக்கப்படக்கூடிய துறையாக குறிப்பிடுகின்றனர்.
எதிர்காலம்: எதிர்மறையானது. வாய்ப்புகளை வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டால் பாதிப்பு குறையலாம்.
ரசாயனங்கள், இயந்திரங்கள்
தாக்கம்: குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இந்திய நிபுணர்களால் ஆபத்து உள்ளதாக குறிப்பிடப்பட்ட இத்துறைகள், 27 சதவீத சுங்கவரியை எதிர்கொள்ளும். ரசாயனங்களுக்கு வரி முன்பு 1.06 சதவீதமாக இருந்தது. அமெரிக்காவுக்கான இயந்திர ஏற்றுமதி செலவும் அதிகரிக்கலாம். இது இந்த சந்தையை சார்ந்த நிறுவனங்களை பாதிக்கலாம்.
பின்னணி: இந்த துறைகளுக்கு இந்தியா அறிவித்திருக்கும் வர்த்தக தடைகளே, இந்த பதிலடிக்கு காரணம் என்கிறது அமெரிக்கா.
எதிர்காலம்: எதிர்மறையானது. சரிசெய்யப்படா விட்டால் ஏற்றுமதி குறையலாம்.
![]() |
மருந்து துறை
தாக்கம்: நேரடி தாக்கம் குறைவு. அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 30 சதவீத பங்கு வகிக்கும் மருந்து துறைக்கு, பரஸ்பர சுங்க வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது.
காரணம்: அமெரிக்காவின் மலிவு விலை சுகாதார செலவுகளுக்கு, இந்திய மருந்துகளை சார்ந்திருப்பது அவசியம் என்பதால், இந்த விலக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.
எதிர்காலம்: குறுகிய காலத்தில் நேர்மறையானது. ஆனால், நீண்டகால நிலைத்தன்மை என்பது, இந்தியா - அமெரிக்க வர்த்தக பேச்சுகளைப் பொறுத்தது.
![]() |
இதர பொருளாதார தாக்கங்கள்
ஏற்றுமதி இழப்புகள்: எஸ்.பி.ஐ., ஆராய்ச்சியின்படி, இந்தியா ஆண்டுக்கு 2.32 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியை இழக்கலாம். இது 3-3.50 சதவீத சரிவாக இருக்கும். 2026ல் இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சியில் இது 5-10 அடிப்படை புள்ளிகளை குறைக்கலாம்.
போட்டியால் நன்மை: வியட்நாம், சீனா போன்ற ஆசிய வர்த்தக போட்டி நாடுகளை விட குறைவாக இருக்கும் வரிவிதிப்பு, சில துறைகளில் இந்தியாவின் சந்தை பங்கை காலப்போக்கில் உயர்த்தலாம்.
ரூபாய் மதிப்பு: பலவீனமான ரூபாய் மதிப்பு, அமெரிக்க நுகர்வோர் விலை உயர்வை ஈடுசெய்யலாம். ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும். ஆனால் இறக்குமதியாளர்களை பாதிக்கும்.