உக்ரைன் மீதான போரை 2 வாரத்தில் நிறுத்தாவிட்டால் அதிக வரி போடுவேன்: ரஷ்யாவுக்கு டிரம்ப் கெடு
உக்ரைன் மீதான போரை 2 வாரத்தில் நிறுத்தாவிட்டால் அதிக வரி போடுவேன்: ரஷ்யாவுக்கு டிரம்ப் கெடு
ADDED : ஆக 24, 2025 03:22 AM

வாஷிங்டன்: 'உக்ரைனுடனான போரை இரண்டு வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் ரஷ்யா மீது மிகப் பெரிய பொருளாதார தடைகள் அல்லது வரி விதிக்கப்படும்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் சர்வதேச ராணுவ அமைப்பான 'நேட்டோ'வில் இணைவதற்கு எதிராக இந்தப் போரை ரஷ்யா துவக்கியது.
தீவிர முயற்சி மூன்றாண்டுகளை கடந்தும் நடந்து வரும் இந்த போரில், உக்ரைனுக்காக இதுவரை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட ஆயுதங்களை அ மெரிக்கா அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அமெரிக்காவின் அலாஸ்காவில் நேரில் சந்தித்து விவாதித்தார். பின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் நேரில் அழைத்து பேசினார்.
இதனால் விரைவில் போர் முடிவுக்கு வரும் என கருதப்பட்ட நிலையில், மேற்கு உக்ரைனின் முகாசெவோ பகுதியில் ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், அங்கு செயல்பட்டு வந்த அமெரிக்க மின்னணு தொழிற்சாலை வெடித்துச் சிதறியது.
இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
உக்ரைனில் உள்ள அமெரிக்க தொழிற்சாலை மீதான ரஷ்யாவின் தாக்குதலை நான் ரசிக்கவில்லை. போர் தொடர்பான எந்த விஷயத்தையும் நான் விரும்புவதில்லை. ரஷ்யா இரண்டு வாரங்களுக்குள் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
விரைவில் முடிவு இல்லையெனில், அவர்களுக்கு பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் அல்லது வரி விதிப்போம். ரஷ்யா இதை பொருட்படுத்தாது என்று சிலர் நினைக்கின்றனர்.
ஆனால் அவர்கள் இதை மிகவும் கவனத்தில் கொள்வர் என்று எதிர்பார்க்கிறேன்.
உக் ரைனின் அமைதிக்காகவும், உலகின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கையை எடுப்பேன். இந்த போ ரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.