விருப்ப மனுக்களை திருப்பி தராத த.வெ.க.,வினர்: மாவட்ட செயலர்கள் மிரட்டியதால் அதிருப்தி
விருப்ப மனுக்களை திருப்பி தராத த.வெ.க.,வினர்: மாவட்ட செயலர்கள் மிரட்டியதால் அதிருப்தி
UPDATED : பிப் 26, 2026 09:51 AM
ADDED : பிப் 26, 2026 06:17 AM

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலர்கள் மிரட்டியதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள் பலரும், அதை திருப்பித் தரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்படைக்கவில்லை
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இத்தேர்தலில், நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க., முதல்முறையாக களமிறங்குகிறது. அக்கட்சி சார்பில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினரிடம், கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதற்கு கட்டணமாக 100 ரூபாய் பெறப்பட்டது.
மனுவை பூர்த்தி செய்து வழங்கும்போது, கட்டணமாக 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விருப்ப மனு வினியோகம் துவங்கிய முதல் நாளில், ஒரு மணி நேரத்தில் 10,000 மனுக்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு நாளும் எவ் வளவு மனுக்கள் விற்பனையாகின; அவற்றில் எவ்வளவு திரும்ப பெறப்பட்டன என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
விருப்ப மனு வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அவற்றை நிரப்பி திரும்ப ஒப் படைக்கவில்லை. இதன் பின்னணியில் மாவட்டச் செயலர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சட்டசபை தேர்தலில் போட்டியிட, த.வெ.க., வில் பலரும் ஆர்வமாக உள்ளனர். தேர்தல் செலவை விஜய் ஏற்க உள்ளதாக கட்சியில் தகவல் பரவியுள்ளது. இதனால், மாவட்டச் செயலர்களே வேட்பாளர்களாக களமிறங்க முடிவு செய்துள்ளனர். கட்சிக்கு 120 மாவட்டச் செயலர்கள் உள்ளனர்.
கடும் அதிருப்தி
விஜய், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போக, 80 தொகுதிகள் வரை, கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த், வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். எனவே, வேட்பாளர்கள் தேர்வு முடிந்துவிட்டது.
மற்ற யாரும் மனுக்களை அளிக்கக் கூடாது என, மனுக்களை வாங்கிய நிர்வாகிகளை, மாவட்டச் செயலர்கள் மிரட்டியுள்ளனர்; மீறி மனுக்களை வழங்கினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் எனவும் எச்சரித்து உள்ளனர். இதனால், கட்சித் தலைவர் விஜய் பெயரில் மனுக்களை அளிக்க திட்டமிட்டிருந்தவர்கள் கூட, அதை திரும்ப வழங்கவில்லை.
தி.மு.க., - அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் பாணியில், த.வெ.க., மாவட்டச் செயலர்களும் நடந்து கொள்வதால், அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

