ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதி பங்கேற்பு; கட்சியின் மூத்த நிர்வாகிகள் 'அப்செட்'
ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதி பங்கேற்பு; கட்சியின் மூத்த நிர்வாகிகள் 'அப்செட்'
UPDATED : பிப் 14, 2024 04:16 AM
ADDED : பிப் 14, 2024 01:18 AM

'உரிமைகளை மீட்க, ஸ்டாலின் அழைப்பு' என்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்திய ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக அமைச்சர் உதயநிதி பங்கேற்றதால், கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'அப்செட்' ஆகினர்.
தி.மு.க., சார்பில், 40 தொகுதிகளிலும் வரும் 16, 17, 18ம் தேதிகளில், தமிழகத்தின் பல நகரங்களிலும் பிரசார பொதுக்கூட்டங்கள் நடக்கவுள்ளன. 'இந்த பொதுக்கூட்டங்களை பிரமாண்டமாக நடத்த வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று முன்தினம் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கூட்டம் முதல்வர் தலைமையில் நடக்கும் என எதிர்பார்த்து, 45 நிமிடங்களாக காத்திருந்தனர். கடைசி நிமிடத்தில், அமைச்சர் உதயநிதி பங்கேற்றதால், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் முழு ஈடுபாடு காட்டவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு பா.ஜ., செய்த அநீதிகளையும், மக்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க.,வையும் கடுமையாக விமர்சித்து பேச வேண்டும். மாவட்டச் செயலர்கள், நகரச் செயலர்கள், ஒன்றிய, பகுதி, வட்டச் செயலர்கள் தான், இதற்கான கூட்டத்தை திரட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
உதயநிதி பேசுகையில், 'ஒரு லோக்சபா தொகுதியில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலிருந்தும் தலா 2,000 பேர் வீதம் கண்டிப்பாக அழைத்து வர வேண்டும். கூட்டம் எப்படி நடக்கிறது என, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின், மாநில நிர்வாகிகள் கண்காணிப்பர்.
'கூட்டம் சரிவர நடக்கவில்லை என்றால், நிர்வாகிகள் விளக்கம் தர வேண்டும். விளக்கம் சரியில்லாத பட்சத்தில் நிர்வாகிகளுக்கு சிக்கல் வரலாம்' என்றார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

