அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்? மின் வாரியம் மீது குவியும் புகார்கள்!
அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்? மின் வாரியம் மீது குவியும் புகார்கள்!
ADDED : செப் 13, 2026 03:28 AM

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதற்கு, காற்றாலை மின் உற்பத்தி குறைவு, சூரிய சக்தி மின் திட்டங்கள் முடக்கம் உள்ளிட்டவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
தமிழகத்தில் தினமும் சராசரியாக 16 ஆயிரம் மெகா வாட் மின் தேவை உள்ளது. கோடைக் காலத்தில் இது 20 ஆயிரம் மெகாவாட்டை எட்டும். இந்த ஆண்டில் இன்னமும் வெயில் வாட்டுவதால், கடந்த ஜூலை 16ல் மின் தேவை 21 ஆயிரத்து 724 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.
தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களில் மின் தேவை அதிகம் உள்ளதால், மின்சார சந்தையில் 1 யூனிட் மின்சாரம் விலை சராசரியாக, 20 ரூபாய்க்கு மேல் உள்ளது. அந்த விலைக்கு மின்சாரம் வாங்க, தமிழக மின் வாரியம் தயக்கம் காட்டுகிறது.
காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால், 1,000 முதல் 1,500 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை தவிர, பிற மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம், அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறிய தாவது:
'எல் நினோ' காரணமாக, கோடைக் காலம் நீட்சி அடைந்துள்ளதால், தினசரி மின் தேவை அளவு குறையவில்லை
காற்றாலை மின் நிலையங்களில், தினமும் சராசரியாக 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரம் கிடைத்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 5 கோடி யூனிட்டாக குறைந்துள்ளது
புதிய காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்திற்கு வழிமுறைகள் வகுக்கப்படாததால், புதிய மின் திட்டங்கள் ஏதும் நடைமுறைக்கு வராமல், முதலீட்டாளர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்
மின் வாரிய மூத்த அதிகாரிகள் புதியவர்கள் என்பதால், இந்த பிரச்னையை கையாள, உரிய ஆலோசனைகளை, கீழ்நிலை அதிகாரிகளுக்கு வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன
ஊழலற்ற ஆட்சி நடத்த த.வெ.க., அரசு விரும்புவதால், மின் திட்டங்களை முறைப்படுத்துவதில், உரிய முடிவுகளை விரைவாக எடுக்க தயக்கம் காட்டுகிறது
நீண்ட அனுபவம் உள்ள மின்சார மேம்பாடு தொடர்பான சங்கங்களின் ஆலோசனைகளை, அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
