ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வி: அமித் ஷா அம்பை வீழ்த்திய இ.பி.எஸ்.,
ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வி: அமித் ஷா அம்பை வீழ்த்திய இ.பி.எஸ்.,
ADDED : ஏப் 11, 2025 05:41 AM

'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மற்றும் ஜெயலலிதா தோழி சசிகலா ஆகியோரை எக்காரணம் கொண்டும் கட்சியில் மீண்டும் இணைக்க மாட்டேன் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக இருப்பதால், அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செங்கோட்டையன் முயற்சி தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக சட்டசபைக்கு வரும் 2026ல் நடக்கவிருக்கும் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டு, அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமைக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார். இதை, பழனிசாமியிடம் நேரடியாகவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அதன் காரணமாகவே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தயக்கம் காட்டுகிறார். இந்த விஷயத்தில், பழனிசாமியை வழிக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பிய அமித் ஷா, இதற்காகவே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை டில்லி வருமாறு அமித் ஷா அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் டில்லி சென்ற செங்கோட்டையன், அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க.,வை ஒன்றுபடுத்தும் முயற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கூட்டணி முடிவு
'அம்முயற்சியில் வெற்றி பெற்று விட்டால், ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்' என்றும் செங்கோட்டையனிடம் அப்போது சொல்லப்பட்டுள்ளது. அதற்கு செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,வை ஒன்றுபடுத்தும் முயற்சி எடுக்கிறேன். ஆனால், என் தலைமையை பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார்' எனக் கூறி விட்டார். அதற்கு பா.ஜ., மேலிடம், 'நீங்கள் ஒற்றுமை முயற்சியை துவக்குங்கள்; கூட்டணி முடிவை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய்சுந்தரம் ஆகியோரிடம், செங்கோட்டையன் பேசியுள்ளார். அப்போது, 'பன்னீர்செல்வத்தை தவிர, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பனை கட்சியில் சேர்க்கலாம். அவர்கள் கேட்கிற தொகுதிகளை தரலாம். வேண்டுமானால், பன்னீர்செல்வம் மகனுக்கு கூட 'சீட்' தரலாம்.
பேச்சுக்கே இடமில்லை
ஆனால், பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் சசிகலாவை ஒரு காலும் சேர்க்க முடியாது என்பதில் பழனிசாமி உறுதியாக இருக்கிறார்' என, செங்கோட்டையனிடம் தெரிவித்துள்ளனர். இதேபோல, தென்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் பழனிசாமியிடம் நேரடியாகவே இதுகுறித்து பேசியுள்ளார்.
அப்போது கோபமான பழனிசாமி, 'இன்னொரு முறை, இதுகுறித்து பேச வேண்டாம். அப்படி பேசுவதாக இருந்தால், இனி என்னை சந்திக்கவே வேண்டாம். இந்த பிரச்னையால், சிறைக்கு செல்லவும் நான் தயாராக இருக்கிறேன். மூவரையும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சி பிளவுபடும்; தேர்தலில் தோற்றுவிடும் என்று யார் சொன்னாலும், அது அவர்கள் விருப்பம். இந்த விஷயத்தில் எந்த சங்கடம் வந்தாலும், அதை ஏற்கத் தயார்' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -