மத்திய அமைச்சர் பிரதான் பேச்சால் பற்றியது நெருப்பு: சட்டசபை தேர்தல் வரை அணையாமல் காக்க தி.மு.க., தீவிரம்
மத்திய அமைச்சர் பிரதான் பேச்சால் பற்றியது நெருப்பு: சட்டசபை தேர்தல் வரை அணையாமல் காக்க தி.மு.க., தீவிரம்
ADDED : பிப் 17, 2025 12:17 AM

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்ன ஒரு விஷயத்தை முக்கியமாக வைத்து, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக வேகமாக அரசியல் செய்யும் தீவிரத்தில் இருக்கிறது தி.மு.க.,
கடந்த சில வாரங்களாகவே, 'மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை; குறிப்பாக, கல்வி திட்டங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை முறையாகக் கொடுக்கவில்லை.
'அதனால், தமிழக மாணவர்களின் மொத்த எதிர்காலமும் பாழாய் போகக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசத் துவங்கி உள்ளார்.
அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் மத்திய பா.ஜ., அரசையும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் மோசமாக விமர்சித்தும் வருகின்றனர்.
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., ஸ்டாலின் சொன்ன கருத்தையே அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி பேசியது.
இது, மத்திய அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால், தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
தி.மு.க.,வின் பேச்சுகளைக் கேட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'டென்ஷன்' ஆனார்.
தமிழகம் மறுக்கிறது
உத்தர பிரதேசத்தில் நடக்கும் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தமிழக அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து, பத்திரிகையாளர்கள் கேட்டதும் பொங்கி விட்டார்.
'தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய்க்கான கல்வி நிதி ஒதுக்காதது குறித்து தெளிவாக விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது...' என துவங்கிய தர்மேந்திர பிரதான், மொத்த விவகாரத்தையும் போட்டு உடைத்தார்.
'நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, அதன்படி செயல்படும்போது, தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. துவக்கத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டனர். ஆனால், பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுத்து வருகின்றனர்.
'தமிழக அரசு, இதில் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழக கல்வி வளர்ச்சி மீது துளி கூட அக்கறையில்லை. மும்மொழி கொள்கையை தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.
'தமிழகம் அதை ஏற்று செயல்படுவதில் எவ்வித சிரமமும் இல்லை. தமிழ், ஆங்கிலத்தோடு, அண்டை மாநில மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கலாம்.
'அதேபோல, தாய் மொழியான தமிழ் மொழி பிரதானமாக இருக்கலாம். புதிய கல்விக் கொள்கை அதற்கு எந்த இடத்திலும் இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது, வம்படியாக புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்பது, முழுக்க முழுக்க அரசியல் தான்.
மொழிப்போர்
'தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்று செயல்படத் துவங்கும் வரை, விதிகளின் படி, கல்விக்கான நிதியை மாநிலத்துக்கு மத்திய அரசால் ஒதுக்க முடியாது.
சட்ட விதிகளை என்றைக்கு தமிழக அரசு பின்பற்ற ஒப்புக் கொள்கிறதோ, அன்றைக்குத்தான் கல்வி நிதியை ஒதுக்க முடியும்' என்று தர்மேந்திர பிரதான் அதிரடியாக கூறினார்.
தி.மு.க., தரப்பினருக்கு, மென்ற வாய்க்கு மேலும் அவல் கிடைத்தது போல் ஆகி விட்டது; அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கத் துவங்கி உள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், 'மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க தொடர்ந்து வலியுறுத்தினால், மற்றொரு மொழிப்போர் ஏற்படும். அதை சந்திக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்' என்றார்.
முதல்வர் ஸ்டாலினோ, 'மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவு பட்டியலில் உள்ளது தான் கல்வி. அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர் அல்ல. 'மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது' என 'பிளாக்மெயில்' செய்வதை தடித்தனத்தை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்; நீண்ட காலம் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
மாநிலத்துக்கான உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனி குணத்தை டில்லி பார்க்க வேண்டியிருக்கும்' என ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.
இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த விஷயத்தில் அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகள் குறித்தும், அப்போது ஆலோசனை கேட்டு உள்ளார்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ., தமிழகத்தை பழிவாங்குகிறது என்ற கோஷத்தை தொடர்ந்து வைக்கும்போது, சிறுபான்மையின ஓட்டுகள், வழக்கம் போல், தி.மு.க.,வுக்கே கிடைக்கும். கூடவே, பொதுமக்களில் பெரும் பகுதியினர், பா.ஜ.,வின் பழிவாங்கும் செயல்பாடுகளால், தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பர் என்ற எதிர்பார்ப்பு தலைமையிடம் உள்ளது.
போராட்டங்கள்
அதனால் தான், பா.ஜ.,வை கடுமையாக எதிர்ப்பதன் வாயிலாக, ஓட்டு அறுவடை செய்யலாம் என கணக்கு போடுகின்றனர்.
கல்விப் பிரச்னையில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்வதன் வாயிலாக, மாணவர்கள், பெற்றோரை தி.மு.க.,வுக்கு ஆதரவாக திருப்ப முடியும்.
வரும் சட்டசபை தேர்தல் வரை, இந்தப் பிரச்னையின் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்வர். இதற்காக, பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசை கண்டித்து, பல்வேறு கட்ட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இதையே தொடர்ந்து பேசுவர்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
பணம் இருந்தால் மட்டுமே
பல மொழி கற்பிப்பா?
முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக்கூடாதா?
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதல்வர்? 1960களில் காலாவதியான கல்விக் கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?
அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,
- நமது நிருபர் -