துணைவேந்தர்கள் இல்லாமல் திண்டாடும் பல்கலைகள்: உயர்கல்வியில் எப்போது மாறும் 'மோதல் சூழ்நிலை'
துணைவேந்தர்கள் இல்லாமல் திண்டாடும் பல்கலைகள்: உயர்கல்வியில் எப்போது மாறும் 'மோதல் சூழ்நிலை'
ADDED : நவ 01, 2024 06:11 AM

மதுரை: தமிழகத்தில் சென்னை, மதுரை காமராஜ் உட்பட 5 பல்கலைகளில் துணைவேந்தர்கள் பணியிடம் காலியாக உள்ளது. 'கவர்னர் - மாநில அரசு' முரண்பாடால் மேலும் இரண்டு பல்கலைகளில் துணைவேந்தர்கள் பதவிக் காலம் முடிந்தும் பதவி நீட்டிப்பில் உள்ளதால் உயர்கல்வி சூழல் கடுமையாக பாதித்துள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 21 பல்கலைகள் உள்ளன. இவற்றில் சென்னை பல்கலையில் ஓராண்டாகவும், கோவை பாரதியார் பல்கலையில் 2 ஆண்டுகளாகவும், ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் ஓராண்டாகவும், சென்னை அண்ணா, மதுரை காமராஜ் பல்கலைகளில் 4 மாதங்களுக்கும் மேலாகவும் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைகளில் பதவிக்காலம் முடிந்த நிலையில் துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடிப்பதால் துணைவேந்தர் தேர்வுக்கான தேடல் குழுவை அமைப்பதில் முடிவு எட்டப்படுவதில்லை. 'யு.ஜி.சி., புதிய விதிப்படி துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி ஒருவர் கூடுதலாக இடம் பெற வேண்டும்' என கவர்னர் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால் தமிழக அரசோ 'பல்கலை சட்டப்படி யு.ஜி.சி., பிரதிநிதி தேவையில்லை. அரசால் நியமிக்கப்படும் தேடல் குழுவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என பிடிவாதம் காட்டுகிறது. இந்த மோதலால் தற்போது காலியாக உள்ள பல்கலைகளில் துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கவர்னருடன் மோதல் போக்கில் இருந்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மாற்றப்பட்டு கோவி செழியன் பொறுப்பேற்ற பின் கவர்னர் ரவியிடம் நெருக்கம் காட்டினார். ஆனால் கடவுள் வாழ்த்து பாடல் சர்ச்சைக்கு பின் கவர்னர் ரவி பங்கேற்ற கோவை பாரதியார், மதுரை காமராஜ், கொடைக்கானல் தெரசா, காரைக்குடி அழகப்பா உள்ளிட்ட பல்கலை பட்டமளிப்பு விழாக்களை கோவி செழியன் புறக்கணித்தார். இதன் மூலம் மீண்டும் முட்டல் மோதல் துவங்கியுள்ளது.
கல்வியாளர்கள் கூறியதாவது: துணைவேந்தர் இல்லாத பல்கலை என்பது கேப்டன் இல்லாத கப்பல் போன்றது, ஆபத்தானது. கல்வி வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும். குறிப்பாக பல்கலைகளின் 'ஐகானாக' விளங்கும் ஆராய்ச்சிகள் பாதிக்கும். புதிய ஆராய்ச்சி திட்டங்கள், அதற்கான நிதி கோருவதற்கான கருத்துரு நடவடிக்கைகள் தேங்கும்.
கல்லுாரிகளுக்கான புதிய பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, உதவி பேராசிரியர்கள் நியனமத்திற்கான தேர்வு குழுக்கள் அமைப்பது. பல்கலைகளில் நிர்வாக ரீதியாக யார் முடிவுகள் எடுப்பது, சிண்டிகேட், செனட் கல்விப் பேரவை கூட்டங்களை நடத்துவது செயல்பாடுகள் பாதிக்கும்.
இச்சூழல் உயர்கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கவர்னர், தமிழக அரசு ஒன்றிணைந்து காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.