உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி பறிப்பு: அரசு அதிரடி
உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி பறிப்பு: அரசு அதிரடி
ADDED : மார் 28, 2025 02:40 AM

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதியை மீறி செயல்பட்ட, நகராட்சி தலைவர் மற்றும் மூன்று மாநகராட்சி கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், '1998ம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்' கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், துணை தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சட்ட விதியை மீறி செயல்பட்ட, சென்னை மாநகராட்சி, 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம்; தாம்பரம் மாநகராட்சி, 40வது வார்டு கவுன்சிலரும், 3வது மண்டல குழு தலைவருமான ஜெயபிரதீப்.
உசிலம்பட்டி, 11வது வார்டு கவுன்சிலரும், நகராட்சி தலைவருமான சகுந்தலா ஆகியோர், உள்ளாட்சி அமைப்புகளில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தனித்தனியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டி நகராட்சி தலைவராக இருந்த சகுந்தலா, 2024ம் ஆண்டு தி.மு.க.,வில் இருந்து, அ.தி.மு.க.,விற்கு தாவியவர்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த சொக்கலிங்கம், திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.சங்கரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.