உத்தர பிரதேசம்: கட்சிகள் மாறவில்லை வாக்காளர்கள் மாறிவிட்டனர்!
உத்தர பிரதேசம்: கட்சிகள் மாறவில்லை வாக்காளர்கள் மாறிவிட்டனர்!
UPDATED : ஏப் 12, 2024 03:11 AM
ADDED : ஏப் 12, 2024 01:58 AM

நாட்டிலேயே மிகவும் அதிக அளவாக, 80 எம்.பி.,க்களை லோக்சபாவுக்கு அனுப்புகிறது உத்தர பிரதேசம். மிகவும் கலவையான இந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள், பல பிரச்னைகளை முன்வைத்தே நடந்து வந்தன.
கடந்த 1980 - 1990களில் ராமர் கோவில் விவகாரம், அதற்கடுத்த ஆண்டுகளில் சமூக நீதி, 2012ல் இருந்து வளர்ச்சிப் பணிகள் ஆகியவை முன்னிறுத்தப்பட்டன.
பெரும் மாற்றம்
பா.ஜ.,வின் கல்யாண் சிங், சமாஜ்வாதியின் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகியோர் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்த பூமி இது. இதன்பிறகு வந்தவர் தான் யோகி ஆதித்யநாத்.
அயோத்தி ராமர் கோவில் தான் பல தேர்தல்களில் முக்கிய பிரச்னையாக வைக்கப்பட்டன. ஆனால், அது மட்டுமே இங்கு பிரச்னை அல்ல. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விகளுக்கும், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கும், ராமர் கோவில் மட்டுமே காரணமல்ல.
அப்படியிருந்தால், 2017 வரை பெரும்பான்மையை பெறுவதற்கு பா.ஜ., போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
கடந்த 2014ல் பிரதமர் மோடி, 2017ல் யோகி ஆதித்யநாத் ஆகியோர், தேசிய அரசியல் மற்றும் உத்தர பிரதேச அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த, 2004, 2009 தேர்தல்களில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி செல்வாக்குடன் இருந்தன. ஆனால், 2014ல் அது மாறியது; 2019லும் தொடர்ந்தது.
இந்த இரு தேர்தல்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்றது.
கடந்த 1980களில் இருந்து, உத்தர பிரதேச அரசியலில், ஜாதி மற்றும் மதம் முக்கியமான காரணியாக இருந்தன. ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் மற்றும் தலித் ஓட்டுகளை நம்பியே, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் அரசியல் செய்து வந்தன. தற்போதும் அதையே செய்கின்றன.
ஆனால், 2014 மற்றும் அதன்பின் மாநிலத்தில் நடந்த தேர்தல்களில், வாக்காளர்களின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆதரவு
பா.ஜ., ஹிந்துத்துவா கட்சியாக இருந்தாலும், வளர்ச்சிப் பணிகள், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி, சட்டம் - ஒழுங்கு மேம்பட்டு உள்ளது, கிரிமினல்கள் ஒடுக்கப்பட்டது போன்றவற்றுக்கு மக்களின் ஆதரவு உள்ளது.
கட்சிகள் இன்றும், ஜாதி, மதத்தின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு மற்றும் பிரசாரத்தை முன்வைத்து வருகின்றன. அவர்கள் மாறவில்லை. ஆனால், வாக்காளர்களின் கண்ணோட்டங்கள் மாறியுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -

