இந்தியாவில் இருந்தபடியே கைலாஷ் தரிசனம் செய்ய உத்தரகண்ட் அரசு ஏற்பாடு
இந்தியாவில் இருந்தபடியே கைலாஷ் தரிசனம் செய்ய உத்தரகண்ட் அரசு ஏற்பாடு
UPDATED : அக் 04, 2024 02:01 AM
ADDED : அக் 04, 2024 12:22 AM

டேராடூன்: நம் நாட்டில் இருந்தபடியே, சீனாவின் திபெத் பகுதியில் உள்ள கைலாஷ் மலையை தரிசிக்க உத்தரகண்ட் அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதிகாசங்களின்படி, சிவ பெருமானுக்கு கின்னவுர் கைலாஷ், மணி மகேஷ், ஸ்ரீகண்ட் மகாதேவ், ஆதி கைலாஷ், கைலாஷ் மலை என, ஐந்து உறைவிடங்கள் உள்ளன.
அவற்றில், கின்னவுர் கைலாஷ், மணி மகேஷ், ஸ்ரீகண்ட் மகாதேவ் ஆகியவை ஹிமாச்சலில் உள்ளன. உத்தரண்டில் ஆதி கைலாஷ் உள்ளது. கைலாஷ் மலை மட்டும், நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த 2020ல், கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டது. இதன்பின், கைலாஷ் மலை தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப் படை, எல்லை சாலை அமைப்பு ஆகியவற்றுடன் கைகோர்த்த உத்தரகண்ட் பா.ஜ., அரசு, இந்தியா - திபெத் எல்லை பகுதியான, பழைய லிபுலேக் பீக் என்ற மலையில் இருந்து, கைலாஷ் மலை தெளிவாக தெரிவதை கண்டறிந்தது.
இதன் பின், சுற்றுலா துறை வாயிலாக தேவையான ஏற்பாடுகளை செய்த உத்தரகண்ட் அரசு, ஆதி கைலாஷ், ஓம் பர்வத், கைலாஷ் மலை ஆகியவை அடங்கிய சுற்றுலா சிறப்பு தொகுப்பை அறிவித்தது.
நான்கு இரவுகள், ஐந்து நாட்கள் அடங்கிய இந்த தொகுப்பின் கட்டணம், 80,000 ரூபாய். இதற்கு, kmvn.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
இந்நிலையில், உத்தரகண்ட் சுற்றுலா துறையின் சிறப்பு ஏற்பாடு வாயிலாக, நம் நாட்டின் மண்ணில் இருந்தபடியே, திபெத் பகுதியில் உள்ள கைலாஷ் மலையை, பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.