கூட்டணி கட்சி தொகுதிகள் மீது வைகோ கண்: 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் 4 பேருக்கு 'கல்தா'
கூட்டணி கட்சி தொகுதிகள் மீது வைகோ கண்: 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் 4 பேருக்கு 'கல்தா'
ADDED : ஆக 05, 2025 03:34 AM

தி.மு.க., கூட்டணியில், 8 தொகுதிகளில் போட்டியிட, ம.தி.மு.க., திட்டமிட்டுள்ள நிலையில், தற்போதுள்ள நான்கு பேருக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமா என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் மதுராந்தகம், பல்லடம், அரியலுார், மதுரை தெற்கு, சாத்துார், வாசுதேவநல்லுார் ஆகிய, 6 தொகுதிகளில் ம.தி.மு.க., போட்டியிட்டது. அதில், அரியலுாரில் சின்னப்பா, மதுரை தெற்கில் பூமிநாதன், சாத்துாரில் ரகுராமன், வாசுதேவநல்லுாரில் சதர்ன் திருமலைக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகளில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்க, ம.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே வழங்கிய தொகுதிகளுடன் சேர்த்து கூடுதலாக ஒன்று மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.
ஆனால், 8 தொகுதி களை தேர்வு செய்து, அத்தொகுதிகளில் சுற்றுப்பயணம் செல்லவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தயாராகி வருகிறார்.
வரும் 9ம் தேதி துாத்துக்குடி, 10ல் கடையநல்லுார், 11ல் கம்பம், 12ல் திண்டுக்கல், 13ல் கும்பகோணம், 14ல் நெய்வேலி, 18ல் சூலுார், 19ல் சென்னை வேளச்சேரி ஆகிய, 8 சட்டசபை தொகுதிகளை குறிவைத்து, வைகோ பிரசாரம் செய்கிறார். அதனால், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், 4 பேரின் தொகுதிகள், அப்பட்டியலில் இடம்பெறவில்லை.
இதனால், அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதால், அக்கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர். வைகோ தேர்வு செய்துள்ள 8 தொகுதிகளில், முஸ்லிம் லீக்கின் கடையநல்லுார், காங்கிரசின் வேளச்சேரியும் உள்ளதால், கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -