'என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க' ராமதாஸ் அடுத்த குண்டு
'என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க' ராமதாஸ் அடுத்த குண்டு
ADDED : ஆக 05, 2025 03:39 AM

சென்னை: தன் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், இது பற்றி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், தான் அமரும் நாற்காலியின் கீழே, ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக, ராமதாஸ் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், 'ஒட்டு கேட்பு கருவியை வைத்தது, மகன் அன்புமணி தான்' என, கடந்த 2ம் தேதி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், தன் வீட்டில் உள்ள 'சிசிடிவி கேமரா'க்களில் பதிவான காட்சிகளை, ஒட்டு கேட்பு கருவி வாயிலாக வேறொரு இடத்தில் பதிவு செய்துள்ளதாக, தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் கண்டறிந்து, ராமதாசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், தன் மொபைல் போனும் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.