குழப்பத்திற்கு தி.மு.க., காரணமல்ல: சத்யா மீது வைகோ சரமாரி குற்றச்சாட்டு
குழப்பத்திற்கு தி.மு.க., காரணமல்ல: சத்யா மீது வைகோ சரமாரி குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 11, 2025 08:13 AM
ADDED : ஜூலை 11, 2025 02:09 AM

சென்னை: ''ம.தி.மு.க.,வில் நிலவும் குழப்பத்திற்கு, தி.மு.க., காரணமல்ல; மல்லை சத்யா தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.
அவர் அளித்த பேட்டி: ம.தி.மு.க.,வை விமர்சித்து மோசமான பதிவுகளை, சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுடன், துணை பொதுச்செயலர் மல்லை சத்யா தொடர்பு வைத்துள்ளார்; ஊக்குவித்து வருகிறார். அதனால் தான் கடைசியாக நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அவர் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினேன்.
தலித் சமுதாயத்தை சேர்ந்த தத்துவ கவிஞர் குடியரசுவை, துணை பொதுச்செயலர் ஆக்கினேன். அவர் இறந்த பின், குடியரசுவின் குடும்பத்தினருக்கு பெரிய செலவு செய்து வீடுகள் கட்டிக் கொடுத்தேன். தலித் சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணனை, பொள்ளாச்சி தொகுதி எம்.பி., ஆக்கினேன். வாசுதேவநல்லுார் சட்டசபை தொகுதியில், சதர்ன் திருமலைக்குமாரை நிறுத்தி, எம்.எல்.ஏ., ஆக்கினேன்.
தி.மு.க.,விடம் ம.தி.மு.க., பெற்று போட்டியிட்ட சட்டசபைக்கான நான்கு இடங்களில் இரண்டில், தலித் சமுதாயத்தினரை வேட்பாளராக நிறுத்தினேன். என் வீட்டில் முழுநேர ஊழியராக இருந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த சந்துரு, பாழடைந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டை முழுமையாக இடித்து, புது வீடு கட்டி கொடுத்தேன். அவர் தன் இல்லத்திற்கு, என் பெயரை வைத்தார்.
என்னை விமர்சனம் செய்து, பதிவு போடுபவர்களிடம் தான், தினமும் தொலைபேசியில் மல்லை சத்யா பேசுகிறார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக இது நடக்கிறது. இதைத் தெரிந்த பின்தான், சத்யா குறித்து நிர்வாகக் குழுவில் வெளிப்படையாக பேசினேன். கட்சிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறியவர்களிடம் தினமும் தொடர்பு கொள்கிறார்.
அவர்களை அழைத்துக் கொண்டு, கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறார். சமூக வலைதளங்களில் என்னை பற்றி பதிவு போடுவதற்கு, வார்த்தைகளையும் எடுத்து கொடுக்கிறார். இவரை விட சிங்கம், புலி என பேசிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் போன்றவர்கள், கட்சியில் இருந்து வெளியேறியபோது கூட, அவர்களால் ஒரு துரும்பு கூட அசையவில்லை.
ம.தி.மு.க.,வில் நடக்கிற குழப்பத்திற்கும் தி.மு.க.,வுக்கும் சம்பந்தம் இல்லை. ம.தி.மு.க.,வில் இருந்த முத்துரத்தினத்தை கட்டாயப்படுத்தி அழைத்து தான், தி.மு.க.,வில் செந்தில் பாலாஜி சேர்த்துள்ளார். முத்துரத்தினத்துடன் இரண்டு நாட்களாக சத்யா சுற்றியுள்ளார்.கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகக் குழுவினர் வலியுறுத்தினர். ஆனால், நான் அமைதியாக இருக்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.