வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
UPDATED : பிப் 08, 2025 02:58 AM
ADDED : பிப் 08, 2025 02:56 AM

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி, வாரணாசி ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி பகவதி கோவில், கும்பாபிஷேகத்தை நேற்று நடத்தி வைத்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி வருகை தந்து, ஜன., 24 முதல் 31 வரை கும்பமேளாவில் பங்கேற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், ஜன., 31ம் தேதி வாரணாசி வந்தடைந்தார். ஜகத்குருவுக்கு பக்தி பரவசத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிராணபிரதிஷ்டை
கடந்த 1977ம் ஆண்டில், வாரணாசி தேவி அன்னபூர்ணா கோவிலின் கும்பாபிஷேகத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமி நடத்தினார். தற்போதைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமியும் அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தினார்.
முன்னதாக, வாரணாசி அன்னபூர்ணா மந்திர் மஹந்த், ஸ்ரீ சங்கர்புரி மஹராஜ், சிருங்கேரிக்கு விஜயம் செய்து, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமியிடம் கும்பாபிஷேகத்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். தனது உத்தராதிகாரி ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமியை கும்பாபிஷேகம் நடத்தும்படி, அவர் வழிநடத்தினார்.
அதன்படி, 37வது சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி மஹா சுவாமி, நேற்று வாரணாசியில், சிருங்கேரி மடம் வழங்கிய அன்னபூரணி தேவியின் புதிய விக்ரஹத்தின் பிராணபிரதிஷ்டை, மஹாகும்பாபிஷேகம் மற்றும் விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை நடத்தினார்.
தங்க சிகர கோபுரம்
மேலும், சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்க சிகர கோபுரத்தின் கும்பாபிஷேகத்தையும் அவர் நடத்தி வைத்தார்.
விழாவையொட்டி, கணபதி ஹோமம், சஹஸ்ரசண்டி மஹா யஜ்ஞம், கோடி குங்கும அர்ச்சனை, மஹாருத்ர யக்ஞம், சதுர்வேத பாராயணம் மற்றும் லோக கல்யாண பாராயணம் உட்பட பல தர்ம நிகழ்வுகள் நடந்தன. 500க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழா வரும் 9ம் தேதி விழா நிறைவு பெறுகிறது. வாரணாசி விஜய யாத்திரைக்குப் பின், ஜகத்குரு சங்கராச்சாரியார், அயோத்தியில் பகவான் ஸ்ரீராமச்சந்திரரை தரிசனம் செய்து, கோரக்பூரில் அவரது யாத்திரையை நிறைவு செய்வார்.
விழாவில், அன்னபூர்ணா மாதா மந்திர் மஹந்த் சங்கர் புரி, மஹந்த் சுபாஷ் புரி, சிருங்கேரி மடம் முதன்மை நிர்வாக அதிகாரி முரளி, நிடி ஆயோக் சேர்மன் சுப்ரமணியம், உத்தர பிரதேச முதல்வரின் ஆலோசகர் அவனிஷ் அவஸ்தி, உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் -