வேணுகோபால் ஒரு ரவுடி; காங்கிரஸ் வெற்றி பெறாது: 'மாஜி' அமைச்சர் மணிசங்கர் அய்யர் சாபம்
வேணுகோபால் ஒரு ரவுடி; காங்கிரஸ் வெற்றி பெறாது: 'மாஜி' அமைச்சர் மணிசங்கர் அய்யர் சாபம்
UPDATED : பிப் 17, 2026 06:23 AM
ADDED : பிப் 17, 2026 04:34 AM

காங்கிரஸ் குறித்த அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் கருத்து, பல்வேறு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கேரளாவில் விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும், காங்., கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
காங்., வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், அது நடக்கும் என நான் நம்பவில்லை. கம்யூனிஸ்ட் தலைவர்களை விட, காங்., நிர்வாகிகள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அதிகமாக வெறுக்கின்றனர்.
ஓட்டு திருடன்
வெளியுறவு துறை அமைச்சராகும் ஆசையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக சசி தரூர் செயல்படுகிறார். காங்., நிர்வாகிகள் எந்தவித நோக்கமும் திட்டமும் இல்லாமல் உள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் நாட்டுக்கே முன்னோடியாக கேரளா திகழ்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவின் தொலைநோக்கு பார்வையை, கேரள அரசு திறம்பட நிறைவேற்றுகிறது. வரும் தேர்தலில், பினராயி விஜயனே வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், ''மணிசங்கர் அய்யரின் கருத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கட்சியின் பிரதிநிதியே இல்லை. அவர் பேசுவது முற்றிலும் தனிப்பட்ட கருத்து,'' என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டில்லியில் மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டி:
மத்தியில் ஆட்சி அமைக்க, 'இண்டி' கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்.
அவர் ஒருவர் தான், வெற்று முழக்கங்களை முன்வைக்காமல், பிரச்னைகளை பேசுகிறார். அவர் பிரதமரை, 'திருடன்' என்றோ, 'ஓட்டு திருடன்' என்றோ சொல்லவில்லை.
கடந்த ஓராண்டாக கூட்டாட்சியை வலுப்படுத்த தேவையானவற்றை மட்டுமே ஸ்டாலின் பேசுகிறார். இதன் வாயிலாக, 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க, ஸ்டாலின் தான் சரியான நபர்.
ஆனால், காங்கிரசில் நடப்பதே வேறு. காங்., தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் போன்ற ரவுடி, ராகுலுக்கு சர்தார் படேல் போல் அறிவுரை வழங்குகிறார். ஒருவருக்கொருவர் சண்டை போடும் தலைவர்களை கொண்ட காங்கிரசுக்கு, யார் ஓட்டளிப்பர்?
முட்டாள்தனம்
தற்போதைய காங்கிரசால், கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை கையாள முடியவில்லை. காங்., செய்தி தொடர்பாளர் பவன் கெரா, ஒரு பொம்மை.
ஜெய்ராம் ரமேஷ் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே திரும்ப திரும்ப சொல்லும் கிளி போன்றவர். அவரை செய்தித் தொடர்பாளராக வைத்திருப்பதை விட, ஒரு கட்சியை முட்டாள்தனமாக வைத்து இருக்க முடியாது.
நான் இன்னும் காங்கிரசில் தான் உள்ளேன். என்னை பவன் கெரோ நீக்கினால், சந்தோஷமாக வெளியேறுவேன். ஆனால், அவரை நேரில் சென்று பின்னாலே மிதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் -

