மாற்றுத்திறனாளிகள் 'விசில்' அடித்து கோஷம்; ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநர்கள் கைது
மாற்றுத்திறனாளிகள் 'விசில்' அடித்து கோஷம்; ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநர்கள் கைது
UPDATED : பிப் 17, 2026 03:31 PM
ADDED : பிப் 17, 2026 04:42 AM

சென்னை: தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார் பில், ஆறு அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, காது கேளாத மாற்றுத்திறனாளிகள், சென்னையில் நேற்று 'விசில்' அடித்தபடி, நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்தில், 'உதவித் தொகையை 6,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
'அரசு விழிப்புணர்வு பதாகைகளில், 'சைகை' மொழி குறியீட்டை பயன்படுத்த வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'விசில்' அடித்தபடி மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டனர்.
சத்துணவு ஊழியர்கள்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஊதிய உயர்வு உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள், கடந்த 3ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று 14ம் நாளாக, மாவட்டத் தலைநகர் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன், ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, காமராஜர் சாலையில், சமூக நலத்துறை அலுவலகம் முன் நடந்த, முற்றுகைப் போராட் டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டெய்சி மற்றும் அமுதா தலைமை வகித்தனர்.
பார்வை மாற்றுத்திறனாளிகள்
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் சார்பில், 'டெட்' தேர்வு மதிப்பெண் குறைப்பு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள், கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கவுரவ விரிவுரையாளர்கள்
தமிழ்நாடு அரசு கல்லுாரிகள், கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., உத்தரவின்படி, 57,000 ரூபாயாக சம்பள உயர்வு வேண்டும்; 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும் உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதிலும் இருந்து ஏராளமான கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும்; சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு ஆட்டோ மற்றும் கால்டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தின் நுழைவாயிலில் கருப்பு ரிப்பன் கட்டும் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, 100க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி செயலர்கள் தமிழக அரசின், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, நேற்று 12ம் நாளாக, ஊராட்சி செயலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடந்த காத்திருப்பு போராட்டத்தில் 1,500க்கும் அதிகமானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகம் முழுதும் கிராம ஊராட்சிகளில், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில், ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
அவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கிராமங்களில், குடிநீர் வினியோகம் உட்பட, பல்வேறு பணிகள் தடைபட்டுள்ளன.
உதவியாளர்கள் கைது
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல், தமிழகம் முழுதும், மாவட்ட அளவில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கடந்த 11ம் தேதி முதல் சென்னையின், பல்வேறு பகுதிகளில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்காம் நாளான நேற்று, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, 350க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் ஊழியர்கள்
'டாஸ்மாக்' நிறுவன மது கடை பணியாளர்களை நிரந்தரம் செய்வது, காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில், சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இம்மாதம், 1ம் தேதி முதல், சென்னையில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட குழுவினரும் பங்கேற்றனர்.
இதுகுறித்து, போராட்ட குழுவினர் கூறுகையில், 'இன்று நடக்கவிருந்த கடையடைப்பு போராட்டம், நாளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.
வாழ்வாதார இயக்கம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி முதல், சென்னையில் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று 14ம் நாளாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில், 200க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

