UPDATED : டிச 20, 2025 07:07 AM
ADDED : டிச 20, 2025 05:34 AM

தேர்தல் கூட்டணி தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்து பேச, காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் இன்று சென்னை வரும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, தமிழக காங்கிரசில் உள்ள பெரும்பான்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால், தமிழக காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும். கேரள மாநிலத்தில் விஜய்க்கு, 10 லட்சம் ரசிகர்களும், புதுச்சேரியில் ஒரு லட்சம் ரசிகர்களும் இருப்பதால், இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என, டில்லி காங்., மேலிடம் கருதுகிறது.
கேரள மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக வேணுகோபாலை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி விஜயை சந்தித்துப் பேச விரும்பும் வேணுகோபால், இன்று சென்னை வர உள்ளார்.
அவர் பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு தலைவராக இருப்பதால், அவரது வருகை, தமிழக போலீசாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட வேண்டும்.
ஆனால், 'அதெல்லாம் தனக்கு தேவையில்லை' என வேணுகோபால் கூறி விட்டதாக தெரிகிறது. டில்லியில் இருந்து சென்னைக்கும், திருவனந்தபுரத்திற்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். எந்த விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் என்பது, நேற்று மாலை வரை உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் சிலர் அனுமதிச்சீட்டு வாங்கியுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீடு அருகில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் என, இரு இடங்களில் வேணுகோபால் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் எந்த ஹோட்டலில் தங்குகிறாரோ, அங்கே விஜயுடன் சந்திப்பு நடக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

