அரசியல் களத்தில் வேகமெடுக்கும் விஜய்; குடியரசு தினத்தில் பரந்துார் செல்ல திட்டம்
அரசியல் களத்தில் வேகமெடுக்கும் விஜய்; குடியரசு தினத்தில் பரந்துார் செல்ல திட்டம்
ADDED : ஜன 14, 2025 05:40 AM

'நடிகர் விஜய், சினிமாவில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், கட்சி உயிரோட்டமாக செயல்படவில்லை; கட்சியினர் முறையாக வழி நடத்தப்படவில்லை' என, த.வெ.க., நிர்வாகிகள் பலரும் புலம்புகின்றனர்.
இந்த விஷயத்தை, கட்சிக்கு வெளியே இருக்கும் நண்பர்கள் சிலர், விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் வியூக வகுப்பாளராக செயல்படும் ஜான் ஆரோக்கியசாமி இருவரையும் கட்சி அலுவலகம் வரவழைத்து, விஜய் பேசிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது, கட்சியை அரசியல் களத்தில் வேகமாக கொண்டு செல்ல, சில ஆலோசனைகளை விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கட்சி துவங்கி ஓராண்டை நெருங்கும் நிலையிலும், நிர்வாக கட்டமைப்பு முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. 60 மா.செ.,க்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மா.செ., என்று கட்டமைப்பை மாற்ற, விஜய் உத்தரவிட்டார். அதற்கான ஏற்பாட்டை விரைந்து செய்யுமாறு, மாநில நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதில், மாநில நிர்வாகிகள் கவனம் செலுத்தவில்லை. இது தொடர்பான செய்திகள் வெளியே வேகமாக பரவியதும், சில நாட்களுக்கு முன், மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டனர். பல மாவட்டங்களிலும் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளோர் குறித்து தகவல் வெளியாக, அதை ஏற்காமல் சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகவல்களும் விஜய்க்கு சென்றன. இதனால், தன்னுடைய கடைசி பட வேலையில் இருக்கும் நடிகர் விஜய், மாநில நிர்வாகிகள் மீது கடும் கோபம் அடைந்துள்ளார். இதையடுத்து, கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரை அலுவலகம் வரவழைத்து பேசியுள்ளார்.
அப்போது, ஜன., 20க்குள், புதிதாக ஏற்படுத்தவிருக்கும் மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் செயலர்கள் யார் என்பதை தேர்வு செய்து, பட்டியல் அளிக்க வேண்டும். மறுநாளே, புதிய மா.செ.,க்கள் பட்டியலை அறிவிப்பேன். சென்னை அருகில் பரந்துார் புதிய விமான நிலையத்துக்கு, அங்கிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போராட்டக் களத்தில் இருக்கும் மக்களை சந்திக்க, குடியரசு தினத்தன்று பரந்துார் செல்ல உள்ளேன். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்' என, விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -