ஜான், ஆதவ் போட்ட துாபத்தில் ஆனந்தை ஓரங்கட்டிய விஜய்
ஜான், ஆதவ் போட்ட துாபத்தில் ஆனந்தை ஓரங்கட்டிய விஜய்
ADDED : மார் 07, 2026 06:11 AM

- நமது நிருபர் -
'வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட எந்த பணிகளையும் செய்ய வேண்டாம்' என, பொதுச்செயலர் ஆனந்தை, த.வெ.க., தலைவர் விஜய் ஓரங்கட்டிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தை துவக்கிய போதிருந்தே அவருடன் ஆனந்த் உள்ளார். மக்கள் இயக்கத்துக்கு நிர்வாகிகளை நியமித்து, நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி அதை வலுப்படுத்தினார். அதோடு, விஜய் படம் வெளியாகும்போது, ரசிகர்களை ஒருங்கிணைத்து, அதை திருவிழா போல் நடத்துவதும் ஆனந்த் வேலைதான்.
ஆனந்துக்கும், தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது கூட, ஆனந்த் பக்கம்தான் விஜய் நின்றார். த.வெ.க.,வில் பொதுச்செயலர் பதவியும் ஆனந்துக்கு கொடுத்தார். அந்த அளவுக்கு ஆனந்த் மீது, விஜய் நம்பிக்கை வைத்திருந்தார்.

ஆனால், விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கும், ஆனந்துக்கும் ஆகாமல் போனது. இருப்பினும், ஆனந்துடன் விஜய் நெருக்கமாக இருப்பதாலும், கட்சி நிர்வாகிகள் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அவரை யாரும் சீண்டவில்லை.
அவரிடமிருந்து அதிகாரத்தை பறிக்க திட்டமிடப்பட்டது. இந்த விஷயத்தில் ஆனந்துக்கு எதிராக, கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவும் கைகோர்த்தார்.
ஆனந்த் இல்லாத நேரத்தில், அவரை கடுமையாக விமர்சித்து ஜான் பேசினார். அந்த ஆடியோ கூட சமீபத்தில் வெளியானது.
தொடர்ந்து, தொழில்நுட்பம், வியூக வகுப்பு போன்ற விஷயங்கள் ஆனந்துக்கு புரியவில்லை என, விஜயிடம் ஜானும், ஆதவும் துாபம் போட்டுக் கொண்டே இருந்தனர்.
போதாக்குறைக்கு ஆனந்தின் மேடை பேச்சும் சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி கட்சியை பாதித்தது. எனவேதான், தற்போது விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், ஆனந்துக்கு பேச அனுமதி தருவதில்லை.
இந்நிலையில், 'வேட்பாளர் தேர்வில் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என, ஆனந்த் ஒரு பட்டியலை தயார் செய்து வைத்திருந்தார்.
நிர்வாகிகளிடம் பலன்களை அடைந்துதான், ஆனந்த் அந்த பட்டியலை தயார் செய்ததாக ஜான் விமர்சிக்க, இருவருக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆனந்துக்கும் ஆதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 'இந்த விவகாரம் விஜயிடம் சொல்லப் பட்டிருக்கிறது.
கோபம் அடைந்த விஜய், 'வியூக வகுப்பு வேலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம்; நீங்கள் போய் உங்கள் தொகுதி வேலையை மட்டும் பாருங்கள்' என ஆனந்தை எச்சரித்துள்ளார்.
இதனால், கடுமையான விரக்தியில் இருக்கும் ஆனந்த், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
அதன்படிதான், மார்ச் 4ம் தேதி தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தின்போது, ஆனந்த் மிக அமைதியாக இருந்திருக்கிறார். ஆனந்த் ஓரம் கட்டப்பட்டதால், அவரை நம்பி இருக்கும் கட்சி நிர்வாகிகள், 'அப்செட்' ஆகி உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

