த.வெ.க.,வுக்கு 20 சீட் மட்டுமே தருவேன்; பழனிசாமி பேரத்தால் விஜய் 'டென்ஷன்'
த.வெ.க.,வுக்கு 20 சீட் மட்டுமே தருவேன்; பழனிசாமி பேரத்தால் விஜய் 'டென்ஷன்'
ADDED : ஜூன் 29, 2025 01:35 AM

கூட்டணிக்கு தமிழக வெற்றி கழகம் வரும் பட்சத்தில், அக்கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க.,வை வரும் சட்டசபை தேர்தலில் தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில், அ.தி.மு.க., - பா.ஜ.,- த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகள் உள்ளன.
இதில் அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்துக் கொண்ட நிலையில், த.வெ.க., தனித்துப் போட்டியிடப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாலும், ஓட்டுகள் பிரிந்து தி.மு.க.,வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடக் கூடும் என்ற அச்சம் அக்கட்சிக்கு உள்ளது.
ரகசிய பேச்சு
இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க.,வை இணைத்து, வலுவான கூட்டணியாக்கி தேர்தலை எதிர்கொண்டால், அக்கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் எனக் கருதும் த.வெ.க.,வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் ரகசிய பேச்சு நடத்தி உள்ளனர்.
அப்போது, பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகி, வெளியே வர வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்த பழனிசாமி, அதற்கு வாய்ப்பே கிடையாது என மறுத்து விட்டார்.
கொள்கை ரீதியில், பா.ஜ.,வோடு கைகோர்க்க முடியாது என, பேச்சில் முரண்டு பிடித்த த.வெ.க.,வினரிடம், பா.ஜ.,வை பண்டாரம் பரதேசி என விமர்சித்த தி.மு.க.,வின் கருணாநிதியே, கொள்கை கோட்பாடுகளையெல்லாம் விட்டுவிட்டு, பா.ஜ.,வோடு கைகோர்த்து தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றார்.
வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும், தி.மு.க., இடம் பெற்றது. தி.மு.க.,வே அப்படி இருக்கும்போது, த.வெ.க., கொள்கை கோட்பாடு பற்றி பேச வேண்டியதில்லை என வகுப்பெடுத்திருக்கிறார் பழனிசாமி.
பின், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற வேண்டுமானால், த.வெ.க.,வுக்கு குறைந்தபட்சம் 80 தொகுதிகளாவது வேண்டும் என, அக்கட்சி தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.
வேட்பாளர்கள் யார்
அதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்த பழனிசாமி, 'இதுவரை த.வெ.க., எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. தனது ஓட்டு வங்கி எவ்வளவு எனவும் நிரூபிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், நாங்கள் எடுத்து வைத்திருக்கும் பல்வேறு 'சர்வே'க்கள் கூறும் தகவல்கள் அடிப்படையில், த.வெ.க.,வுக்கு 20 சீட்களை, வேண்டுமானால் தர முடியும்.
அதுவும், 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
கட்சியின் மா.செ.,க்களாக முகம் தெரியாதவர்களை நியமித்திருக்கும் த.வெ.க.,வில், போட்டியிடுவோருக்கு எவ்வளவு தொகை தேர்தலுக்கு செலவு செய்ய முடியும் என்பதையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை பேச்சின்போது பழனிசாமி நிர்தாட்சண்யமாக சொல்லியிருக்கிறார்.
கூடவே, தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால், அ.தி.மு.க., தனித்துத்தான் ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சி, முதல்வர், துணை முதல்வர் என்ற வலியுறுத்தல் எதுவும் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பழனிசாமியுடன் பேச்சு நடத்தியவர்கள், இதை நடிகர் விஜயிடம் சொன்னபோது, அவர் அதிர்ச்சி அடைந்து விட்டதாக, அக்கட்சியினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
அவசரப்பட்டு யாருடனும் அடுத்தடுத்து பேச்சு நடத்த வேண்டாம். தனித்துப் போட்டியிடும் எண்ணத்துடனேயே களத்தை தயார் செய்வோம். தேர்தலை நோக்கி கட்சியினரை முதற்கட்டமாக முடுக்கிவிடுவோம்.
சுற்றுப்பயணம்
அதற்காக, விரைவில் தமிழகம் முழுதும் நான் சுற்றுப்பயணம் செய்து, கட்சியினரையும் மக்களையும் சந்திக்கிறேன். அப்போது, காணப்படும் மக்கள் எழுச்சியைக் கண்டு, ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சிகளும் மிரளுவார்கள்.
நம்முடைய செல்வாக்கு கண்டு, மிரளும் சூழலில் யாருடனும் பேச்சு நடத்தினால், அவர்களும் நம் கோரிக்கை மற்றும் நிபந்தனைகளை மதிப்பர்.
அதுவரை, நம்மை குறைவாக மதிப்பிட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், கூட்டணிக்காக ஒத்துவர மாட்டார்கள் என கட்சியினரிடம் நடிகர் விஜய் கூறியுள்ளார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -