ஜெ., பிரசார ஸ்டைலில் களமிறங்கும் விஜய்: நான்கு ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம்
ஜெ., பிரசார ஸ்டைலில் களமிறங்கும் விஜய்: நான்கு ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம்
UPDATED : அக் 23, 2025 03:34 AM
ADDED : அக் 23, 2025 02:36 AM

மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல், ஹெலிகாப்டரில் பறந்து சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரசார திட்டம் தயாராகிறது.
இதற்காக பெங்களூரு நிறுவனம் ஒன்றில், 4 ஹெலிகாப்டர்களை ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இணையாக விஜயின் த.வெ.க., பார்க்கப்படுகிறது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக த.வெ.க., இருக்கும் என கூறப்படும் நிலையில், சனிக்கிழமை தோறும், வார இறுதி நாளில் பிரசாரம் என்ற புதிய நடைமுறையை ஏற்படுத்தினார், விஜய்.
ஆனால், கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால், அமைதியானார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், கரூர் சம்பவத்தை வைத்து, த.வெ.க.,வை ஆளும் தி.மு.க., முடக்கலாம் என அச்சத்தில் இருந்த விஜய்க்கு, அந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது; த.வெ.க., வினர் சுறுசுறுப்பாகி உள்ளனர்.
வழக்குகள், தனித்து போட்டியா, கூட்டணியா என த.வெ.க., பற்றி பலரும் பலவித கருத்துகளை கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, விஜயின் அடுத்த கட்ட தேர்தல் பிரசார வியூகத்தை திட்டமிட்டு வருகிறார்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மீண்டும் பிரசாரத்தை விஜய் துவங்கும்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் அந்த பிரசாரம் இருக்கும் என்கின்றனர், த.வெ.க., நிர்வாகிகள்.
இது குறித்து த.வெ.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் திரளுவதால், வாகனங்களில் சென்று தேர்தல் பிரசாரம் செய்வது விஜய்க்கு பெரும் சவாலாக உள்ளது.
பாதுகாப்பு கொடுப்பதில் போலீசாரும் திணறுகின்றனர். போதிய பாதுகாப்பு வழங்காததால், கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். ஆனால் விஜய் தாமதமாக வந்ததாக, திரும்ப திரும்ப கூறி வருகின்றனர்.
இதுவரை நடந்த மாநாடு, பிரசாரக் கூட்டங்களின் அனுபவங்களை கொண்டு, விஜயின் பிரசாரம் திட்டமிடப்படுகிறது.
அதன்படி, சாலை வழியாக, பிரசார வாகனத்தில், இனிமேல் விஜய் செல்லப்போவதில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், பிரசாரத்தை மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து, பிரசாரம் நடக்கும் மாவட்டத்திற்கு தனி விமானத்தில் சென்று, அங்கிருந்து பிரசார இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டமிட்ட நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாகவே சென்று பிரசார கூட்டத்தில் பேசவிருக்கிறார். தொண்டர்களை காத்திருக்க வைக்கக்கூடாது என்பதற்காகவே இப்படி திட்டமிடப்படுகிறது.
இதற்காக, பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம், நான்கு ஹெலிகாப்டர்களை ஓராண்டுக்கு பயன்படுத்தும் வகையில், ஆதவ் அர்ஜூனா தரப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பிரசாரம் செய்யும் இடம், நகருக்கு வெளியே உள்ள பகுதியாகவும், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில், மிகப்பெரிய இடமாகவும் தேர்வு செய்யப்படும். இதற்கான பணிகள் ஆதவ் அர்ஜூனா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
- நமது நிருபர் -.