ADDED : டிச 15, 2025 05:11 AM

சென்னை: 'சட்டசபை தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை, விஜய் தான் அறிவிப்பார்' என த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுவதாக, சிலரின் பெயர்களை தொகுதிகளுடன் குறிப்பிட்டு தகவல் பரவியது.
மேலும், 'த.வெ.க., தலைவர் விஜய், கூட்டணி பேச்சுகளில் கவனம் செலுத்தி வருகிறார்; புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
ரகசிய சந்திப்பு
'இதற்காக, நேற்று முன்தினம் சென்னை வந்த அக்கட்சித் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியை, விஜய் ரகசியமாக சந்தித்துள்ளார்.
'தொகுதிகளில் த.வெ.க., சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்செங்கோடு தொகுதியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், அத்தொகுதியில் த.வெ.க., சார்பில் முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் போட்டியிடுவார்; இதை விஜய் அறிவிப்பார்' என தகவல்கள் வெளியாகின.
அதேபோல், புதுச்சேரி த.வெ.க., முதல்வர் வேட்பாளராக அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் அறிவிக்கப்படுவார் எனவும், சென்னை சேப்பாக்கம் தொகுதியில், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவார் எனவும் தகவல் பரவியது.
உண்மையில்லை
ஆனால், 'இவை வதந்தி' என த.வெ.க., தலைமை மறுத்து வெளியிட்ட அறிக்கை: த.வெ.க., வேட்பாளர்களை, கட்சித் தலைவர் விஜய் மட்டுமே அறிவிப்பார். த.வெ.க., வேட்பாளர் அறிவிப்பு குறித்து பரவி வரும் தகவல் உண்மையில்லை.
தற்போது நடப்பது தொகுதி வாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் குறித்த தகவல், விஜயால் நேர்காணல் நடத்தப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில், சரியான வேட்பாளர்களை விஜய் களமிறக்குவார். அதுவரை களத்தை தயார்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

