நாட்டின் வளர்ச்சிக்கான துறைமுகமாகிறது விழிஞம்: விரைவில் ரூ.12,000 கோடியில் 2ம் கட்ட விரிவாக்க பணி
நாட்டின் வளர்ச்சிக்கான துறைமுகமாகிறது விழிஞம்: விரைவில் ரூ.12,000 கோடியில் 2ம் கட்ட விரிவாக்க பணி
UPDATED : ஜூலை 31, 2025 01:20 AM
ADDED : ஜூலை 31, 2025 01:03 AM

சென்னை:'திருவனந்தபுரம் விழிஞம் துறைமுகத்தில், 12,000 கோடி ரூபாயில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணி, வரும் செப்டம்பரில் துவங்கப்படும்' என, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், விழிஞம் சர்வதேச துறைமுகத்தை, பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ், 8,867 கோடி ரூபாய் செலவில், அதானி குழுமம் அமைத்துள்ளது.
இந்த துறைமுகத்தை, கடந்த மே மாதம் 2ம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதுவரை, 415 சரக்கு கப்பல்கள் வாயிலாக, 9.03 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுஉள்ளன.
இந்த துறைமுகத்தை, நான்கு கட்டங்களாக விரிவாக்கம் செய்து, பிரமாண்டமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, 12,000 கோடி ரூபாயில், இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள், வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்கப்பட உள்ளன.
சிறப்பு அம்சங்கள் இதுகுறித்து, விழிஞம் துறைமுகத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
அதானி குழுமத்துக்கு, இந்தியாவில் 10 உட்பட மொத்தம் 15 துறைமுகங்கள் உள்ளன. இதில், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் துவங்கப்பட்டுள்ள விழிஞம் சர்வதேச துறைமுகம், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விளங்குகிறது.
கிழக்கு -- மேற்கு மற்றும் கிழக்கு - மத்திய கிழக்கு ஆசிய சர்வதேச கப்பல் பாதைகளில் இருந்து, வெறும் 10 கடல் மைல்கள் அதாவது, 18 கி.மீ., துாரத்தில், இது அமைந்து உள்ளது.
இந்தியாவின் ஆழமான துறைமுகமாக அமைந்துள்ளது. பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம் என்ற பெருமை பெற்றுள்ளது. சென்னை ஐ.ஐ.டி., உடன் இணைந்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன தானியங்கி கப்பல்- 'ஷோர் கிரேன்'கள், தானியங்கி 'யார்டு கிரேன்'கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், செயற்கை நுண்ணறிவு திறனான ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக இயங்கும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பும் உள்ளது.
இந்தியா தற்போது ஆண்டுக்கு, 50 லட்சம் முதல் 60 லட்சம் சரக்கு பெட்டகங்களை, ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றுதல் செய்கிறது.
இதில், 75 சதவீதம் கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாக, 'டிரான்ஸ்ஷிப்' செய்யப்படுகின்றன.
இனி, இந்தியாவின் உள்நாட்டு 'டிரான்ஸ்ஷிப்மென்ட்' தேவைக்கு விழிஞம் துறைமுகம் தீர்வு அளிக்கும். இதன்படி, முதல் கட்டமாக, ஆண்டுதோறும் 15 லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், அடுத்தடுத்த விரிவாக்க பணிகள் முடியும்போது, இது மேலும் அதிகரிக்கும்.
வேலைவாய்ப்பு இதனால், இந்தியா வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்திருப்பது குறைந்து, அன்னிய செலவாணி அதிகரிக்க வழிவகை செய்யும்.
இந்த துறைமுகத்தில், இரண்டாவது கட்டமாக, 12,000 கோடி ரூபாயில் விரிவாக்க பணிகளை, அநேகமாக செப்., மாதத்தில் துவங்க உள்ளோம்.
தற்போதுள்ள 800 மீட்டர் கொண்ட கன்டெய்னர் கப்பல்களை கையாளும், 'பர்த்' 2,000 மீட்டராக அதிகரிக்கப்படும். இது தவிர, இதர உள்கட்டமைப்புகளும், அதிநவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படும்.
இந்த விரிவாக்க பணிகளை, 2028ல் முடிக்க உள்ளோம். இதனால், ஆண்டுதோறும் சரக்கு கன்டெய்னர்கள் கையாளும் எண்ணிக்கை, 15 லட்சத்தில் இருந்து 45 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். 2000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற முடியும்.
இதேபோல், 2045க்குள் மூன்று மற்றும் நான்காம் கட்ட விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் வளர்ச்சிக்கான துறைமுகமாக இது மாறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்புகள் என்ன? இந்தியாவின், 23 மீட்டர் வரை இயற்கையான ஆழம் கொண்ட ஆழ்கடல், தானியங்கி கொள்கலன் துறைமுகம்
ஆசிய சர்வதேச கப்பல் பாதைகளில், மிக அரு கில் உள்ள துறைமுகமாக உருவெடுத்துள்ளது
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எட்டு தானியங்கி கப்பல் -ஷோர் கிரேன்கள், 24 முழு தானியங்கி யார்டு கிரேன்கள் கொண்டுள்ளது. 2 நிமிடத்தில் ஒரு கன்டெய்னர் கையாளப்படுகிறது
ஒன்பது கி.மீ., துாரத்தில், தேசிய நெடுஞ்சாலை இணைப்பு வருவதால், சரக்கு லாரிகளில் இருந்து சரக்குகளை கொண்டு வரவும், எடுத்து செல்லவும் வசதியாக இருக்கும்
திருவனந்தபுரம் - கன்னியாகுமரி 86 கி.மீ., இரட்டை ரயில் பாதையில், நாகர்கோவில் வரை பணிகள் முடிந்து உள்ளன.
இங்கிருந்து திருவனந்தபுரத்தை இணைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த ரயில் இணைப்பு வரும்போது, இந்த துறைமுகத்தையும் இணைக்கும் வகையில், ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன
முக்கிய போக்குவரத்து இணைப்புகளான தேசிய நெடுஞ்சாலை, ரயில், விமான நிலையம் மிக அருகில் உள்ள துறை முகமாக விரைவில் மாற உள்ளது.
தென் மாவட்டங்களின்
தொழில் வளர்ச்சிக்கு உதவும்
விழிஞம் துறைமுக அதிகாரிகள் கூறியதாவது: விழிஞம் துறைமுகத்தில், தற்போது சரக்கு கப்பல் மட்டுமே கையாளப்படுகிறது. இரண்டாம் கட்ட விரிவாக்கம் முடிந்த பின், அடுத்தடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, இதர சரக்குகளை கையாளுவோம். ஸ்டீல், இயற்கை எரிவாயு பொருட்கள் போன்றவை கையாளுவோம். சுற்றுலா என்பது கேளராவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இதற்கான, புதிய கொள்கையை மாநில அரசு உருவாக்கி வருகிறது.
இதன் அடிப்படையில், சுற்றுலா சொகுசு கப்பல்கள் இயக்க, பயணியருக்கான வசதிகள் ஏற்படுத்துவோம். கேரளாவில் தொழில், பெரிய ஆலைகள் துவங்குவதற்கு, ஒரே இடத்தில் பெரிய அளவிலான இடத்தை தேர்வு செய்வதில், இயற்கையாகவே சிக்கல் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் காலி நிலங்கள் இருக்கின்றன.
சேலம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையும் மிக அருகில் இருப்பதால், சரக்குகளை லாரிகளில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படாது. தென் மாவட்டங்களில் தேர்வு செய்துள்ள புதிய பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைக்க, தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இங்கு வந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்ய, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
முதலீட்டாளர்களுக்கும் மற்ற துறைமுகங்களை ஒப்பிடுகையில், இந்த துறைமுகத்தை பயன்படுத்தும்போது செலவு குறையும். இதனால், தமிழக தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். கடல் அரிப்பு ஏற்படாது கடலின் அலைகள் மற்றும் நீரோட்டத்தை பாதுகாக்கும் வகையில், 'பிரேக் வாட்டர்' எனப்படும் கடல்சார் பாதுகாப்பு முறை, இந்த துறைமுகத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துறைமுகத்தின் இடது புறத்தில், 4 கி.மீ., துாரத்துக்கு, 120 மீட்டர் அகலத்தில், 'பிரேக் வாட்டர்' அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கொண்டு வரப்பட்ட 70 லட்சம் பாறாங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, 1,500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. கடல் அரிப்பு, புயல் போன்ற இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்கும் வகையில், வலுவான கடல்சார் பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.