ADDED : மார் 10, 2024 02:32 AM

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்தவர் கே.சி.வேணுகோபால். இவர், காங்கிரசின் பொதுச் செயலராக பவர்புல் பதவியில் இருப்பவர். ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். கட்சி நிர்வாகிகள் நியமனம் உட்பட முக்கிய அறிக்கைகள், இவர் கையெழுத்தில் தான் வெளியாகும். சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர்.
ஆனால் கட்சி தலைவர்கள், தொண்டர்களிடையே இவருக்கு நல்ல பெயர் கிடையாது. தனக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக சோனியா-, ராகுல் வாயிலாக நியமித்துக் கொண்டார்; இதனால் பலருடைய வெறுப்பை சம்பாதித்தார்.
தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா எம்.பி.,யாக, 'ஏசி' அறையில் இருந்து கொண்டு கட்சியை நிர்வகிக்கிறார். 'களத்தில் இறங்கினால் தான் எங்களுடைய பிரச்னைகள் இவருக்கு தெரியும்' என, கட்சியினர் பலரும் நொந்து போய் சொல்லி வந்தனர்.
கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே பதவிக்கு வந்தவுடன், வேணுகோபாலை மாற்ற நினைத்தார்; சோனியா குடும்ப ஆதரவு இருந்ததால் முடியவில்லை.
இந்நிலையில் காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டில் வெளியானது. அதில், 'ஆலப்புழா தொகுதியில் இருந்து வேணுகோபால் போட்டியிடுவார்' என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இது தொண்டர்களையும், பல தலைவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், ராகுலையும் பாராட்டு கின்றனர். ஒரு வழியாக களத்தில் இறங்கும் வேணுகோபாலை, 'நன்றாக கவனிக்க' தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
'கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் போட்டி' என, பட்டியல் அறிவித்தாலும் உ.பி.,யில் உள்ள அமேதி தொகுதி குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அமேதியில் எப்போதும் வெற்றி பெறும் ராகுல், கடந்த முறை ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். மீண்டும் இங்கு போட்டியிடுவார் என சொல்லப்பட்டாலும், 'ஏன் முதல், 'லிஸ்டி'ல் வரவில்லை?' என, தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
