பிராமணர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் கட்சிக்கே ஓட்டு
பிராமணர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் கட்சிக்கே ஓட்டு
UPDATED : ஏப் 01, 2025 12:29 PM
ADDED : ஏப் 01, 2025 08:24 AM

மதுரை; ''பிராமணர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கட்சிகளுக்கே 2026 தேர்தலில் ஓட்டு,'' என தமிழ்நாடு பிராமண சமாஜ மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தைய்யர் மதுரையில் பேசினார்.
தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண திருமண மண்டபத்தில் பஞ்சாங்க வெளியீட்டு விழா நடந்தது. மாவட்டத் தலைவர் ரவி தலைமை வகித்தார். பொது செயலாளர் ஸ்ரீராமன் வரவேற்றார்.
பிராமண சமாஜம் உதவும்
ஹரிஹர முத்தைய்யர் விசுவாவசு வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டார். உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
ஹரிஹர முத்தைய்யர் பேசியதாவது: தமிழகத்தில் மட்டும் தான் பிராமணர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அதை சரி செய்ய வேண்டியது நம் கடமை. நமக்குள் ஒற்றுமை தேவை. தைரியம், உறுதியுடன் அதற்கான பணியை செய்ய வேண்டும். அதற்காக நடத்தப்படும் போராட்டங்களுக்கு பிராமண சமாஜம் உதவும்.
நம் சமூக வளர்ச்சிக்கு பாடுபடுவதே நோக்கம். மதுரை, தஞ்சாவூர் என சமாஜ கிளைகள் விரிவடைவது மகிழ்ச்சி.
சனாதனம், வேதம், தர்மம், கலாசாரம் என நம் பண்பாடு உயரியது. ஹிந்து தர்மம் உன்னதமானது. அதை பாதுகாக்க வேண்டும்.
பிராமணர்களின் ஓட்டு வங்கி அதிகம். 2026 சட்டசபை தேர்தலில், நம் முக்கியத்துவத்தை கட்சிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். பிராமணர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கட்சிகளுக்கே 2026 தேர்தலில் நமது ஓட்டு என்றார்.
உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் கிருஷ்ணவேணி, பிராமண திருமண மகால் தலைவர் சங்கர நாராயணன், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் நந்தகுமார், தொழிலதிபர் சங்கர நாராயணன் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் ரவி நன்றி கூறினார். மாவட்ட பிராமண சமாஜ ஆலோசகர் நெல்லை பாலு தொகுத்து வழங்கினார்.

