வக்பு மசோதா திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல்! பட்ஜெட் தொடரில் நிறைவேறுவது உறுதி
வக்பு மசோதா திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல்! பட்ஜெட் தொடரில் நிறைவேறுவது உறுதி
UPDATED : ஜன 28, 2025 04:11 AM
ADDED : ஜன 28, 2025 02:24 AM

எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கோரியிருந்த திருத்தங்கள் அனைத்தையும் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மை அடிப்படையில் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டதால், எதிர் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
நாடு முழுதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படுத்த வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அங்கு இந்த மசோதா ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த ஆறு மாதங்களாக பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும், வக்பு சொத்துக்கள் தொடர்புடைய தரப்பினர், சட்ட வல்லுனர்கள், அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களை கேட்டது.
44 திருத்தங்கள்
ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளை சமாளித்து, இந்த மசோதா பல்வேறு கட்டங்களை கடந்து, நேற்று இறுதி கட்டத்துக்கு வந்தது. இந்த மசோதாவில் உள்ள ஒவ்வொரு அம்சம் குறித்தும், விரிவான விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு திருத்தம் மீதும் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பார்லிமென்ட் கூட்டுக்குழு கூடியதும், எதிர்க்கட்சிகள் வழக்கம்போல கடும் எதிர்ப்பை தெரிவித்தன. அவர்கள் தரப்பில் 44 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருத்தங்களுக்கு எதிராக 16 ஓட்டுகளும், ஆதரவாக 10 ஓட்டுகளும் கிடைக்கவே, இவை அனைத்துமே தோற்கடிக்கப்பட்டன. அதே நேரத்தில், ஆளும் பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி சார்பில், 14 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, இவை அனைத்தும் ஓட்டெடுப்பு வாயிலாக ஏற்கப்பட்டன.
கூட்டம் முழுதும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருந்த திரிணமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி வெளியில் வந்து நிருபர்களிடம் கூறுகையில், ''திருத்தங்கள் குறித்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மீது பேச வாய்ப்பு கேட்டோம்; தரப்படவில்லை. இது, முழுக்க முழுக்க கேலிக்கூத்து; தவறான நடைமுறையாக உள்ளது.
''அரசு தரப்பு என்ன நினைக்கிறதோ, அதை செய்வது என முடிவெடுத்து விட்டனர். இன்றைய கூட்டத்தில் எங்களை பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை; விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. ''முக்கிய ஆவணங்கள், கருத்துப் பதிவுகள் உள்ளிட்டவற்றை கேட்டும், எதையுமே எங்களுக்கு தரவில்லை. இன்று, ஜனநாயகத்தின் கருப்பு நாள். அதற்கு காரணமானவர் என்று வரலாற்றில் இடம்பெறப் போகிறார், ஜெகதாம்பிகா பால்,'' என்றார்.
கால அவகாசம்
பா.ஜ., - எம்.பி., அபராஜிதா சாரங்கி கூறுகையில், ''அனைவரது கருத்துகளும் பொறுமையாக கேட்கப்பட்டன. அனைவருக்கும் போதுமான கால அவகாசம் தரப்பட்டது. ''ஜனநாயக முறையில் தான் கூட்டத்தை ஜெகதாம்பிகா பால் நடத்தினார். கூட்டத்தை நடத்தவிடாமல் கல்யாண் பானர்ஜி தான் இடையூறு செய்தார்,'' என்றார். இதையடுத்து, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
- நமது டில்லி நிருபர் -