'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க என முதல்வர் பேசியது சிலப்பதிகார டயலாகா?' : த.வெ.க., தலைவர் விஜய்
'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க என முதல்வர் பேசியது சிலப்பதிகார டயலாகா?' : த.வெ.க., தலைவர் விஜய்
ADDED : டிச 19, 2025 04:19 AM

ஈரோடு: ''தமிழகத்தில் துாய சக்தி த.வெ.க.,; தீய சக்தி தி.மு.க., என்னை சினிமா டயலாக் பேசுவதாக கூறுகின்றனர். முதல்வர் பேசுவது சிலப்பதிகார டயலாகா?'' என, ஈரோட்டில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் விஜய் பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த, 'மக்கள் சந்திப்பு' பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நல்ல காரியம் ஆரம்பிக்கும்போது மஞ்சள் வைத்து ஆரம்பிப்பர். த.வெ.க., கொடியில், அந்த எனர்ஜிடிக்கான மஞ்சள் உள்ளது. அதுபோல, மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி ஈரோடு. இங்க, ஒரு மகத்தான மனிதர் பற்றி பேசி ஆக வேண்டும்.
இங்கு, விவசாயத்துக்கு மிக முக்கிய கவசமாக இருப்பது காளிங்கராயன் அணை, கால்வாய். அணை கட்டியதிலும், கால்வாய் வெட்டியதிலும் உணர்வுப்பூர்வமான நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை கட்டியபோது காளிங்கராயன் சோர்வடைந்த சமயத்தில், அவரது அம்மா சொன்னாங்களாம்.
'மகனே காளிங்கா... தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கிறது; மோர் விற்ற காசு, முகடு வரைக்கும் இருக்கிறது. அதை வைத்து அணையை கட்டு' என்றாராம்.
பெத்த அம்மா கொடுக்கும் தைரியத்தை தாண்டி வேற எதுவுமே கிடையாது. அப்படி ஒரு தைரியத்தை நீங்கள் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்.
33 ஆண்டு உறவு இதை பிரிப்பதற்காக, சூழ்ச்சிக்கார கூட்டங்கள் முயற்சிக்கின்றன. அவங்களுக்கு தெரியாது. இது இன்னைக்கு வந்த உறவு அல்ல. நான் சினிமாவுக்கு 10 வயதில் வந்தபோது ஸ்டார்ட் ஆன உறவு; 33 ஆண்டுகளுக்கு மேல இருக்கிற உறவு.
நல்ல விஷயம் செய்து கதை சொன்னால் பரவாயில்லை. எதையும் செய்யாமல் கதை விடுகின்றனர். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தை இன்னும் விரிவுப்படுத்தினால், மூன்று மாவட்ட மக்கள் பயன்பெறுவர். வள்ளுவர் கோட்டம் மீது காட்டும் அக்கறையை, மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஏன் காட்டுவதில்லை?
கவர்ன்மென்ட் நடத்துகின்றனரா; கண்காட்சி நடத்துகின்றனரா? அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இருவரும் தமிழகத்தின் சொத்து. அவர்களை பயன்படுத்துவது பற்றி யாரும் கம்ப்ளைன்ட் பண்ண முடியாது; தனியாக சொந்தம் கொண்டாடி யாரும் அழுது கொண்டு இருக்க வேண்டாம்.
உங்களுக்கு, த.வெ.க., ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுறீங்க? உங்களுக்கு, கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை; எனக்கு, என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் 'மாஸ்' மக்கள் தான் துணை.
நம் அரசியல் எதிரி தி.மு.க., தான். களத்தில் இல்லாதவர்களை, களத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களை எதிர்க்கும் ஐடியா இல்லை.
ஆட்சிக்கு வந்த உடனே, 'நீட்' தேர்வை ரத்து செய்வோம்; கல்விக் கடனை ரத்து செய்வோம்; காஸ் விலையை குறைத்து, மானியமாக வழங்குவோம் என்றீர்கள்... செய்தீர்களா? பவானி - நொய்யல் - காவிரி ஆறு இணைப்பு பற்றி, 103வது தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, செய்யவில்லை. ஆற்றை சுத்தப்படுத்த, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக கூறிவிட்டு, மணலைத்தான் கொள்ளை அடித்தனர்.
'பீக் ஹவர் சார்ஜ்' என மின் கட்டணத்தை உயர்த்தி, தொழில்களை நசுக்கிவிட்டனர். எதை கூறினாலும், 'மாடல் அரசு மாடல் அரசு' என்பர். ஆனால், இவை பற்றி பட்டியல் போட்டால், 'யூ டர்ன்' அடித்து விடுவர்.
ஆனால், 24 மணி நேரமும் விஜயை மடக்குவது எப்படி? த.வெ.க.,வை முடக்குவது எப்படி என்பதை பற்றியே யோசிக்கின்றனர்.
விஜய் அரசியல் பேசவில்லை; சினிமா டயலாக் மாதிரி பேசுகிறார்; 10 நிமிடம் தான் பேசுகிறார்; பஞ்ச் டயலாக் பேசுகிறார் என சொல்கின்றனர். வாயில் வடை சுடுவதற்கு நாங்கள் தி.மு.க., அல்ல; த.வெ.க.,
எந்த ஆட்சியில் 207 பள்ளிகளை மூடியது நடந்தது? பிறகு எப்படி கல்வியில் சிறந்த மாநிலம் என்று கூறுகிறீர்கள்?
தீய சக்தி த.வெ.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கில் சமரசமே இருக்காது. இலவசத்துக்கும், மானியத்துக்கும் நான் எதிரி அல்ல; தகுதியானவர்களுக்கு சென்றடைய வேண்டும் என நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தையில் தி.மு.க.,வை காலி செய்தனர். அப்போது , 'ஏன் இவ்வாறு கடினமாக கூறுகின்றனர்' என யோசித்தேன்; இப்போது தான் தெரிகிறது, 'தி.மு.க., ஒரு தீய சக்தி' என்று. டி.வி.கே., ஒரு துாய சக்தி.
தமிழகத்தில், 'துாய சக்தி டி.வி.கே.,வுக்கும்; தீய சக்தி டி.எம்.கே.,வுக்கும் தான் போட்டி!'
நான் பேசினால் சினிமா டயலாக் என்கின்றனர். 'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க'ன்னு முதல்வர் ஸ்டாலின் பேசியது, சினிமா டயலாக் இல்லையா? அது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்தா பேசினீர்கள்?
தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களும், மத்தியில் ஆட்சி செய்பவர்களும் என் கேரக்டரை புரிந்து கொள்ள வேண்டும்.
செங்கோட்டையன் மாதிரி நிறைய பேர் இன்னும் த.வெ.க.,வில் வந்து சேருவர். அவர்கள் எல்லாருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கம்பத்தில் ஏறிய தொண்டர்
விஜய் பேசிக் கொண்டு இருந்தபோது, த.வெ.க., தொண்டர் ஒருவர், மைதானத்தில் இருந்த உயரமான கம்பத்தில் ஏறினார். அதை கவனித்த விஜய், 'தம்பி... கீழே இறங்குப்பா... ப்ளிஸ் கீழே இறங்குப்பா; நீ இறங்கினால் தான் முத்தம் கொடுப்பேன்' என்றார்.
இதையடுத்து, அந்த தொண்டர் கீழே இறங்கினார். உடன், 'பிளையிங் கிஸ்' பறக்க விட்டார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுடன், விஜய் செல்பி வீடியோ எடுத்து, அதை உடனடியாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

