அதிகாரி போட்ட வீடியோவால் சரிந்தது தர்ப்பூசணி விற்பனை: விவசாயிகள் குமுறல்
அதிகாரி போட்ட வீடியோவால் சரிந்தது தர்ப்பூசணி விற்பனை: விவசாயிகள் குமுறல்
ADDED : மார் 31, 2025 12:27 AM

'தமிழக உணவு பாதுகாப்பு துறை ஏற்படுத்திய விழிப்புணர்வு நடவடிக்கையால், தர்ப்பூசணி விற்பனை குறைந்து, நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்' என, விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கோடைக் காலம் துவங்கி விட்டதால், இளநீர், தர்ப்பூசணி, நுங்கு உள்ளிட்ட, உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை, வாங்கி சாப்பிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிலர் தர்ப்பூசணியில் சிவப்பு நிறத்திற்காக, ஊசி வழியே ரசாயனத்தை கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'ரசாயனம் கலந்த தர்ப்பூசணி, அடர் சிவப்பு நிறத்திலும், ரசாயனம் கலக்காத தர்ப்பூசணி, இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தர்ப்பூசணியை வாங்கி சாப்பிட வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த, 'வீடியோ'வால், தர்ப்பூசணி விற்பனை குறைந்து விட்டதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாய நலச்சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:
தமிழகத்தில் செங்கல் பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், 7,000 விவசாயிகள், 14,000 ஏக்கருக்கு மேல் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக உள்ளது.
துவக்கத்தில் தர்ப்பூசணி 1,000 கிலோ, 14,000 ரூபாய் வரை விற்பனையானது. பிறகு, 10,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வீடியோ வெளியான பிறகு, 3,000 ரூபாயாக குறைந்து விட்டது.
அறுவடை செய்யும் போது, தர்ப்பூசணி இளஞ்சிவப்பிலும், ஐந்து நாட்களுக்கு பிறகு அடர் சிவப்பிலும் மாறுவது அதன் இயல்பு.
அறுவடை செய்த நாளில் இருந்து, 15 நாட்கள் வரை தர்ப்பூசணி சாப்பிட உகந்ததாக இருக்கும்.
தர்ப்பூசணியை சிறிதளவு, 'கட்' செய்தாலும், குறிப்பிட்ட சில மணி நேரங்களில், சாப்பிட முடியாத நிலைக்கு வந்து விடும். ரசாயன ஊசி போட்டால், அவை ஓரிரு நாட்களுக்கு மேல் தாங்காது; விரைவில் கெட்டு விடும்.
இதனால், தர்ப்பூசணியில் ரசாயனம் கலக்க வாய்ப்பில்லை. இவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புரிந்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .