ஹிந்து சமுதாயத்தை உணர்வுள்ள சமுதாயமாக மாற்றி உள்ளோம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
ஹிந்து சமுதாயத்தை உணர்வுள்ள சமுதாயமாக மாற்றி உள்ளோம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
ADDED : டிச 10, 2025 06:02 AM

சென்னை: ''நுாறு ஆண்டுகளில் ஹிந்து சமுதாயத்தை, உணர்வுள்ள சமுதாயமாக, ஆர்.எஸ்.எஸ்., மாற்றி உள்ளது,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
நான்கு நாட்கள் பயணமாக, நேற்று முன்தினம் சென்னை வந்த மோகன் பகவத், நேற்று மாலை, சென்னை திருவான்மியூர், ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த, இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆயுதப் போராட்டம்
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: சுதந்திரப் போராட்ட காலத்தில், நாம் ஏன் பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமையானோம் என, டாக்டர் ஹெட்கேவார் சிந்தித்தார். பிரிட்டிஷார் சிறுபான்மையாக இருந்தபோதும், ஆயுதப் போராட்டத்தில், இந்தியர்கள் தோல்வி அடைந்தனர்.
அதற்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியாத, விழிப்புணர்வு பெறாத, சமுதாயமாக இருந்ததே காரணம். இது குறித்து, பல தலைவர்களிடம் ஆலோசித்த பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை ஹெட்கேவார் துவக்கினார். உணர்வற்று இருந்த ஹிந்து சமுதாயத்தை, உணர்வுள்ள சமுதாயமாக, கடந்த 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., மாற்றியுள்ளது.
நாம் அனைவரும் ஒரே தேசம், அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற விழிப்புணர்வை, நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ்., ஏற்படுத்தியுள்ளது. ஜாதி, மொழி பிரிவினைகளை அகற்றி, தேசிய உணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது. தனி மனிதன், அனைத்து வகைகளிலும், சிறந்து விளங்கினால்தான், நாடு முன்னேறும்.
அறிவு பயிற்சி
அதனால்தான் தனி மனிதர்களுக்கு உடல், மனம், அறிவு பயிற்சியை, ஆர்.எஸ்.எஸ்., அளிக்கிறது. இதற்காகவே 'ஷாகா' எனப்படும் தினசரி கூடுதல்கள் நடத்தப்படுகின்றன. முதலில் மக்கள் ஆர்.எஸ்.எஸ்.,சை அலட்சியம் செய்தனர். அதன் கொள்கைகளை, மக்கள் எளிதில் ஏற்கவில்லை. ஹிந்து சமுதாயம், ஒரு உணர்வற்ற, இறந்து போன சமூகமாகவே கருதப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில், தற்போதுள்ள நிலைக்கு மாற்றி உள்ளோம்.
நான்கு வகை
'நான் ஹிந்து என்பதில் பெருமிதம் அடைகிறேன்' என்று கூறுவோர்; 'நான் ஹிந்து. ஆனால் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது' என்போர்; 'நான் ஹிந்து' என்பதை திரைமறைவில் மட்டுமே ஒப்புக்கொள்வோர்; தான் ஹிந்து என்பதையே மறந்தவர்கள் அல்லது அந்த உணர்வு மறக்கடிக்கப்பட்டவர்கள் என ஹிந்துக்களை நான்கு வகைப் படுத்தலாம்.
இப்போது ஹிந்து என்பதில் பெருமிதம் அடைகிறோம் என்று சொல்வோர் அதிகம் இருப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ்.,தான் காரணம். இந்த ஆண்டு, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அமைப்பின் பணிகளை, ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
மக்கள் மத்தியில் மாற்றம் உருவாக்க வேண்டும். அந்த மாற்றம் மக்களின் நடைமுறையில் ஒன்றாக வேண்டும். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும், தேசிய சிந்தனை கொண்டவர்களை உருவாக்க வேண்டும்.
நாட்டுக்காக உழைக்க, அனைவரும் தயாராக உள்ளனர். அதற்கான சூழலையும், வாய்ப்பையும், 'ஆர்.எஸ்.எஸ்., ஷாகா' உருவாக்குகிறது. முழு சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே, ஆர்.எஸ்.எஸ்., நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

