ADDED : ஏப் 26, 2025 07:04 AM

சென்னை: 'காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பேசியவர்கள், ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், பெரம்பலுார் மாவட்டத் தலைவர் சுரேஷ் பேசுகையில், ''கட்சி அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற வகையில், 72 தொகுதிகளை தி.மு.க.,விடம் பெற வேண்டும்.
''குறைந்தபட்சம் 60 தொகுதிகளையாவது பெற வேண்டும். இல்லையெனில், கூட்டணியை விட்டு விலக வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர், அதிக தொகுதிகள் தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய மற்ற மாவட்டத் தலைவர்களும், 'கூட்டணியில் தி.மு.க.,விடம் இருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், ''ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளை எடுத்து பேச வேண்டும். ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தலுக்கு, அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும்,'' என்றார்.
கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ''எம்.எல்.ஏ., பதவி பெற அனைவருக்கும் ஆசை இருக்கலாம். அதற்கு நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு முன் கட்சியை பலப்படுத்த, அனைவரும் உழைக்க வேண்டும்,'' என்றார்.